செஞ்சி சிறுமி மாயம்.. பாபநாசம் படம் போல திட்டமிட்டு பேசுகிறார்களா? பெற்றோர் பக்கம் திரும்பிய CBCID
செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் 37வது நாளாக CBCID போலீசார் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமாகி, 37 நாட்களாகியும் சிறுமி பற்றிய எந்தவொரு www.dailythanthi.c தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. சிறுவாடி காப்புக்காடு, செங்கல் சூளைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை நடத்தியும் எந்த தடயமும் சிக்கவில்லை. இந்த வழக்கில் 37வது நாளாக CBCID போலீசார் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சிறுமியின் தந்தையிடம் நேற்று 7 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தாய் பவானி, பாட்டி சாந்தியிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் செஞ்சி சிறுமி வழக்கில் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் நேரடியாக ஆலம்பூண்டி கிராமத்திற்கு வந்து தாய் பவானி, பாட்டி மற்றும் தந்தை வடிவேலு ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார். எத்தனை முறை குறுக்குக் கேள்விகள் கேட்டாலும், தாயும் தந்தையும் ஒரே மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், ஒரு குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி எந்தத் தகவலையும் வெளியே விடாமல் பேசுவதும் அதிகாரிகளை யோசிக்க வைத்துள்ளது. பாபநாசம் படத்தில் வருவது போல மொத்த குடும்பமும் சொல்லி வைத்து பேசுகிறார்களோ என்று செஞ்சி சிறுமி வழக்கில் சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்துள்ளார்களாம்.