சட்டப்பேரவையில் கலகல...எம்.எல்.ஏக்களுக்கு டம்ளருக்கு பதில் பாட்டில்களில் தண்ணீர் வைக்க வேண்டும் - பிரேமலதா..!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பல்வேறு முக்கிய கோரிக்கைகளையும், அரசியல் விமர்சனங்களையும் முன்வைத்துப் பேசினார்.
விவாதத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு அதனைத் தனி மாவட்டமாக தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும், விருத்தாசலம் பகுதி மக்களின் நீண்ட நாள் தேவையாக உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தை இந்த அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
காவிரி மற்றும் முல்லை பெரியாறு அணை பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், அண்டை மாநிலங்களுடன் சுமுகமான உறவைப் பேண வேண்டும் என குறிப்பிட்டார். "தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களிலுமே தற்போது புதிய முதலமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளனர். எனவே, இவர்கள் மூவரும் அரசியல் பாகுபாடின்றி நட்பு ரீதியாக நேரில் பேசி, நீண்ட கால நதிநீர் விவகாரங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
சட்டமன்ற அவையில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து பிரேமலதா பேசுகையில், "அவை உறுப்பினர்களுக்குத் தம்பளர்களில் (டம்ளர்) தண்ணீர் தருவதற்குப் பதிலாக, தண்ணீர் பாட்டில்களை வழங்கலாம்" என்ற ஆலோசனையை முன்வைத்தார்.இதற்கு அவையிலிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (OPS) குறுக்கிட்டு, "அவையில் உறுப்பினர்கள் சில நேரங்களில் கோபமடைந்தால், கையில் இருக்கும் தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீச வாய்ப்பு உள்ளது" என நகைச்சுவையாகவும் எச்சரிக்கையாகவும் குறிப்பிட்டார்.அதற்குப் பதிலளித்த பிரேமலதா, "அவையில் கோபத்தை வெளிப்படுத்த பாட்டிலைத் தான் வீச வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை" என்று சாதுரியமாக பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா, தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பாக அமைந்த ஆளுநரின் உரையை கடுமையாகச் சாடினார்.
"சட்டசபையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை, நடுநிலையாக இல்லாமல் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளர் பேசுவது போலவே இருந்தது. மேலும், ஆளுநர் ஆற்றிய 37 நிமிட உரையில், அவரது தமிழ் உச்சரிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 37 தவறுகள் இருந்தன" எனப் பிரேமலதா விஜயகாந்த் சுட்டிக்காட்டினார்.
முதல்வர் பிறந்தநாளுக்கு பிரேமலதா வைத்த கோரிக்கை விழுந்து விழுந்து சிரித்த சட்டசபை 🤣🔥 #cmvijay #vijay #Cmvijaybirthday #premalatha #kalakkalcinema pic.twitter.com/ZXnWilimyw
— Kalakkal Cinema (@kalakkalcinema) June 22, 2026