×

சென்னையில் பைக் ரேஸை தடுக்க 30 மேம்பாலங்கள் மூடப்படுகிறது

 

2025 ம் ஆண்டு நாளையுடன் விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னை மாநகரமும் தயாராகி வருகிறது. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி புத்தாண்டை கொண்டாடுவதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள்,  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்திலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். கூடுதல் போலீஸ் கமிஷனர்கள்,  இணை கமிஷனர்கள் ஆகிய  ஆலோசனையின் பேரில், துணை கமிஷனர்கள்  மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள்  தலைமையில், அனைத்து காவல் நிலையங்களையும் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களும்தங்களது பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறிந்து அங்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் படையினர், சட்டம் ஒழுங்கு பிரிவினர் என சென்னை மாநகர் முழுவதும் 19 ஆயிரம் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுடன்  1,500 ஊர்க்காவல் படையினரும்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை   இரவு 9  மணியிலிருந்தே  முக்கியமான இடங்களில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையாறு,  பரங்கிமலை, பூக்கடை,  வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய காவல் மாவட்டங்களில் மொத்தம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு போலீசார் மோட்டார் சைக்கிள் சென்று ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

புத்தாண்டை ஒட்டி நாளை இரவு இளைஞர்கள் மது போதையில் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கும்,அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று பைக் ரேஸில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜிஎஸ்டி ரோடு  ஆகிய பகுதிகளிலும் ,தாம்பரம் ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பைக் ரேஸ் ஐ கட்டுப்படுத்துவதற்காக 30  தனிப்படைகளும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. பைக் ரேசை தடுக்க 30 மேம்பாலங்கள் மூடப்படுகிறது.