×

தவெக மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரபத்தியில் நடைபெற்றது. இதற்காக, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவிந்தனர். 

தீர்மானம் 1: பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சிகளில் திமுக அரசு இறங்கியுள்ளது. அதில் பெரும்பான்மையான நிலங்கள் விவசாயிகளுக்கு சொந்தமானவை. தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதை தடுக்க, வருடக்கணக்கில் போராடி வரும் மக்களின் போராட்டத்தை நசுக்கவும், பலவந்தமாய் அவர்களின் நிலங்களைப் பறிக்கவும் திமுக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

பரந்தூரில் விமான நிலையத்திற்காக, அரசு கையகப்படுத்த முயலும் நிலப்பரப்பில் 13 வற்றா நீர்நிலைகள் உள்ளன. விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இவை அழிக்கப்பட்டால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதோடு, பருவமழை காலங்களில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது.

பரந்தூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். இதற்கு பதிலாக, விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாத வகையில், மாற்று இடத்தை விமான நிலையத்திற்காக தேர்வு செய்ய வேண்டும்.

தீர்மானம் 2: நியாயமான முறையில் தேர்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில், 8.3 சதவீதமாகும்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற வாக்காளர் சரிபார்ப்புப் பட்டியலில் இவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படவில்லையா? இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியிருப்பது ஜனநாயக விரோதமில்லையா? என்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்? போலி வாக்காளர்கள், போலி முகவரி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. இது மக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மட்டுமே. அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

தீர்மானம் 3: கச்சத்தீவை மீட்க வேண்டும்

ஒன்றிய மற்றும் மாநில அரசுகள், மீனவர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் எப்போதும் அரசியல் ஆதாயமாக மட்டுமே பார்க்கின்றன. ஆனால், தவெக எப்போதும் உண்மையான மீனவ நண்பனாக அவர்களுடன் நிற்கும். இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கைது செய்வதைத் தடுக்க, அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்வதை நிறுத்த, மீன்பிடி தொழிலையும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க, தவெக ஏற்கெனவே கூறியது போல, கச்சத்தீவை மீட்க வேண்டும்.

இதுவரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களின் படகுகளை இலங்கை அரசுத் திருப்பித் தரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தீர்மானம் 4: ஆணவக்கொலையை தடுக்க தனிச் சட்டம்

தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகரித்திருப்பதாக உயர்நீதிமன்றமே வேதனை தெரிவித்துள்ளது. சாமானிய மனிதர்கள் சராசரி வாழ்க்கை நடத்தக்கூட அஞ்ச வேண்டிய சூழல், தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. ஆணவக் கொலைகளைத் தனிச் சட்டம் இயற்றி தடுக்கத் தவறிய திமுக அரசு, எப்படிச் சமூக நீதி அரசாகும்? ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும் போது, அதை திமுக அரசு உள்நோக்கத்துடன் நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

தீர்மானம் 5: பெண்கள் பாதுகாப்பு மற்றும் லாக்கப் மரண எதிர்ப்பு

தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணம் முதல் காவலர் படுகொலைகள் வரை சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றன. நெஞ்சைப் பதற வைக்கும் இச்சம்பவங்கள், மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இதனால், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இளைய சமுதாயம் பாதுகாப்பற்ற சூழலை சந்தித்து வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறையில்லாமல் செயல்பட்டு வரும் விளம்பர மாடல் திமுக அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் 6: TNPSC தேர்வர்களின் பிரச்சனை

அரசுப்பணியில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பாததால், இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பரிதவித்து வரும் சூழல் தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஆனால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

அவுட்சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்படுவதால், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவையே தகர்த்துவிடும் பேராபத்து ஆகும். எனவே, இந்த அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நேர்மையான முறையில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு தவெக மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.