முக்கிய அறிவிப்பு! தேர்தலுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமுமின்றி சுலபமாக வாக்குச்சாவடிக்கு சென்று தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக, தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச நகர பேருந்து வசதியை அறிவித்துள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியான பிரவீன்குமார், மதுரை மாவட்டத்தில் இதற்காக செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதேபோல், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.
தேர்தல் நாளான ஏப்ரல் 23ம் தேதியன்று, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்கள் கட்டணமில்லா பயண டோக்கன்களை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் எந்தவித கட்டணமுமின்றி பயணம் செய்யலாம். இலவச பயணத்தை மேற்கொள்ள விரும்பும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பேருந்து நடத்துநரிடம் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் சில ஆவணங்களை காண்பித்து இலவச பயணச்சீட்டை பெற்று கொள்ளலாம்.
முதியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன், தங்களின் வயது மற்றும் அடையாளத்தை உறுதி செய்யும் ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை அட்டை அல்லது நலவாரிய அட்டை ஆகிய அரசு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம். இந்த இலவச பயண சலுகையானது, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை, அதாவது வாக்குப்பதிவு நடைபெறும் நேரம் முழுவதும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் கூட பயணிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்கள், உடல் இயக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் வீல்சேர் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தல் ஆணையம் ஒரு சிறப்பான வசதியை செய்துள்ளது. இவர்கள் தங்கள் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சென்று, வாக்களித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பும் வரை பிரத்யேக வாகன வசதியை தேர்தல் ஆணையமே இலவசமாக வழங்குகிறது. இந்த வசதியை பெற விரும்புவோர், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ சக்சம் என்ற மொபைல் செயலி மூலமாகவோ, அல்லது 1950 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்புகொண்டோ முன்பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.