ஓட்டுப்போட விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உடனே இந்த நம்பரில் புகார் அளியுங்கள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் குறித்து இதில் தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். எனவே வாக்காளர் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளம் Voter Helpline App, Saksham-ECI App அல்லது 1950 என்ற எண்ணுக்கு அழைத்து வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம். 13 ஆவணங்கள் விவரங்களை https://votervazhikatti.tn.gov.in/documents என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
https://votervazhikatti.tn.gov.in/location-map என்ற இணையதளம் மூலமாக உங்களின் வாக்குச்சாவடியின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குச்சாவடிக்குள் மொபைல், கேமரா, ஸ்மார்ட்வாட்ச் கொண்டு சொல்ல அனுமதி இல்லை. இவற்றை வைத்து செல்ல வாக்குச்சாவடிக்கு வெளியே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தரை தளத்தில் வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பொது வரிசையில் காத்திருக்க தேவையில்லை. அனைத்து மக்களும் வாக்களிக்கும் வாக்குப்பதிவு நாளான்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரிடம் 79046 46090 என்ற என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள் வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டும் பயணம் செய்யும்போது ஏதேனும் வயது சான்று மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்களை அளிக்காமல், கட்டணமில்லா பயணச்சீட்டினை நடத்துநரிடம் பெற்று பயணம் செய்யலாம். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வாக்குகளை பதிவு செய்ய மா.போ.கழக சாதாரண கட்டண பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் UDID Card மற்றும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பயணச்சீட்டினை பெற்று பயணம் செய்யலாம்.