×

2 நாட்கள் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... மக்களே ஜாக்கிரதை!

 

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகி வருகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக நேற்றிலிருந்தே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மழை கொட்டித்தீர்த்திருக்கிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடியில் அதீத கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 31 செமீ மழை பதிவாகியுள்ளது.

இச்சூழலில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அடுத்த இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழ்நாட்டு கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்றிம் நாளையும் மீனவர்கள் கடலுக்குச்  செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.