×

விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு- இருவர் பலி

 

சாத்தூர் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சட்டவிரோதமாக பட்டாசு கருந்திரி தயாரித்த இரண்டு வட மாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிறுகுளம்-கே.மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள விவசாய தோட்டம் நத்தத்துப்பட்டியை சேர்ந்த சரவணன்(45)மனைவி கவிதா என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த விவசாய தோட்டத்தில் உள்ள குடியிருப்பில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 5 வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அறையில் பட்டாசுக்கு தேவையான கருந்திரியை இயந்திரம் மூலம் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு வந்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் இயந்திரம் மூலமாக கருந்திரி தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் அசாம் மாநிலத்தை சபிக்குஅலி(14),ஜொகீதுல்உசேன்(17) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் அறிந்த சாத்தூர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,உயிரிழந்த இருவரின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில்,குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி பெற்றுக்கொண்டு அங்கு சட்டவிரோதமாக பட்டாசு கருந்தரி தயாரித்தது தெரியவந்துள்ளது. மேலும் அப்பையநாயக்கன்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.