நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த இளையராஜாவுக்கு முதல்வர் கொடுத்த அட்டகாசமான பரிசு
லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்தார்.
லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி தனது முதல் சிம்பொனியை அரகேற்றம் செய்தார் இசைஞானி இளையராஜா. இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அதற்காக இளையராஜா அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா, “அனைவருக்கும் என்னுடைய மகிழ்ச்சிகரமான வணக்கம்.உங்களுக்கு இருக்கக்கூடிய அதே மகிழ்ச்சி என் நெஞ்சத்திலும் தெரிகிறது, அது நெஞ்சோடு நெஞ்சில் தொடர்புடையதாக இருக்கிறது என்பது ஆண்டவனுடைய அருள் என்று தான் நினைக்கின்றேன்.நீங்கள் வந்ததற்கு மிகவும் நன்றி எனக் கூறி ஊடகவியலாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்” என்றார். முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இசைஞானி இளையராஜா, தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக நன்றி கூறினார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “இலண்டன் மாநகரில் #Symphony சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.