"ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் கிளாஸ் எடுத்தா அவ்ளோதான்!" – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி எச்சரிக்கை!
பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பேட்டி:
கிருஷ்ணகிரியில், தகைசால் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், மாணவர்களிடம் தலா, 350 ரூபாய் வசூலிக்கப்பட்டது. பணம் வழங்காத மாணவர்களை வெளியே நிறுத்தியதாக புகார்கள் எழுந்தன.நிகழ்ச்சிகளுக்காக யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் பெறக்கூடாது. பணம் வழங்கவில்லை என்பதற்காக, மாணவர்களை தண்டிக்கக்கூடாது. தண்டனை என்பதே இந்த துறையில் இருக்கக்கூடாது.தண்டனை வழங்குவதற்கு இது ஒன்றும் புழல் சிறைச்சாலை கிடையாது. இது, பள்ளிகளை நிர்வகிக்கும் துறை. இந்த விவகாரம் தொடர்பாக, விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
தனியார் பள்ளிகள், பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, நன்றாக படிக்காத மாணவர்களை தனித் தேர்வர்களாக பிரிக்கக்கூடாது. மேலும், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
இது தொடர்பாக புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழக அரசு இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. புதிதாக சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தொடங்கும்போது, உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பள்ளிகளின் பள்ளி மேலாண்மை குழுவில், அரசியல் கட்சியினருக்கு அனுமதி கிடையாது; பெற்றோர் மட்டுமே இடம்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.