☰
×

காலையில் ஆபீஸ் வந்து மாலையில் வீட்டுக்கு போனா ஆட்சி நடத்த முடியாது! TVK ஆட்சியை விமர்சித்த திமுக தலைவர்!

 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய விடுதலைப் போராட்டத்திற்கு துனை நின்றவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ஆங்கிலேய அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்துப் போராடியவர். சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாக கருதுகிறோம்.

திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக பசும்பொன்னில் இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 2024-ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை திறந்து வைத்தேன். கடந்த 2007-ஆம் ஆண்டு தேவரின் நூற்றாண்டு விழாவை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சிறப்பாகக் கொண்டாடினார்.

‘கோழையாக இருக்கக்கூடாது; போராடி வெற்றி பெற வேண்டும்’ என்ற தேவரின் கருத்து இன்றைக்கும் எனது மனதில் நிலைத்திருக்கிறது. அந்த வழியில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்ற உறுதியை எடுத்துக்கொள்கிறோம்” என்றார்.

முதலமைச்சர் விஜய்க்கு அரசு நிர்வாகத்தில் போதிய கவனம் இல்லை

தொடர்ந்து தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், “தற்போதைய ஆட்சியின் மீது அதிருப்தி தான் உள்ளது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பாலியல் குற்றங்கள், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

முதலமைச்சர் விஜய், காலையில் அலுவலகத்திற்கு வந்து மாலையில் வீடு திரும்புவது போன்ற செயல்பாடுகளால் மட்டும் ஆட்சியை நடத்த முடியாது. திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்ததை நம்பி வாக்களித்த மக்கள், அவர் ஆட்சியிலும் கதாநாயகனைப் போல் செயல்படுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது ஏமாற்றத்தில் இருக்கின்றனர். மேலும், தற்போதைய முதலமைச்சர் விஜய் அரசு நிர்வாகத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருக்கிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து, திமுகவினர் மீதான கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், சட்டரீதியான நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.