×

நீங்கள் சொல்வது உண்மையென்றால், அந்த கடிதத்தை வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்..!!

 
தமிழகத்தின் 'நெற்களஞ்சியம்' எனப்படும் தஞ்சாவூரில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், நெல்லுக்கு தமிழக அரசு அளித்து வரும் ஊக்கத்தொகையால் அதன் உற்பத்தி பெருகி ஏராளமான பிரச்சனை ஏற்படுவதாகவும், எனவே இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் எனவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு அண்மையில் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நேற்று பதிலடி கொடுத்திருந்தார். அதில், 'நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான, அரசியல் உள்நோக்கம் கொண்டது.
தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும்.
மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிர் பல்வகைப்படுத்துதலை (Crop Diversification) ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசார்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் தொலைநோக்குப் பார்வையாகும். இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை.
மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.' என்று குற்றம்சாட்டியிருந்தார்.
மத்திய நிதியமைச்சரின் இந்த விளக்கத்திற்கு பதிலடி தரும் விதத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே, நெல்லுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் விளைச்சல் பெருகிக் கொண்டே போகிறது. எனவே, இந்த ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு தங்களின் அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே உள்ளது.
கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை. அப்படி பேச வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
தங்களுடைய இந்த பதிவில், "குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை" என்றும் கூறியிருக்கிறீர்கள்.
தங்களது கூற்று உண்மையென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.