ஜெயில்ல இருந்தா உயிரோட இருக்க மாட்டோம்! தேனி சிறையில் இருந்து தப்பிய கைதி வீடியோ வைரல்
தேனி மாவட்ட சிறையில் இருந்து அக். 26-ம் தேதி இரவு 17 கைதிகள் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பினர். பின்னர் போலீஸார் பல தனிப்படைகளை அமைத்து அவர்களை பிடித்தனர். தப்பிச் சென்றபோது மீனாட்சிசுந்தரம் என்ற கைதி வனப்பகுதியில் இருந்து வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: நான்தான் தேனி சிறையில் இருந்து தப்பிய மீனாட்சி சுந்தரம். நீதிபதிக்கும் முதல்-அமைச்சர் விஜய்க்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாங்கள் சிறையில் இருந்து தப்பியது குற்றங்களை செய்வதற்காக அல்ல! எங்களுடன் தப்பிய கைதிகளிடம் கேட்டு பாருங்கள்.
சிறையில் நடக்கும் விஷயங்களை நீதிபதியிடம் சொல்லி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காகத்தான் நாங்கள் தப்பினோம். ஜெயிலில் இருக்கவே எங்களுக்கு பிடிக்கவில்லை. இப்போது என் வீடியோவை பார்த்துவிட்டு எந்த நீதிபதி என் உயிரை காப்பாற்றினாலும் நான் உடனே சரண்டராகிவிடுகிறேன் (போலீஸாரிடம் சிக்குவதற்கு முன்பு போட்ட வீடியோ).
எங்களை சிறையில் மிகவும் சித்ரவதை செய்தார்கள். சிறை கண்காணிப்பாளரிடமும் எங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொன்னோம். யாருமே எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறையில் இருந்து தப்பித்த அன்றைய தினம் இரவு கூட நாங்கள் சிறை காவலர்களிடம் கேட்ட போது , நீங்கள் என்ன ராஜ்ஜியம் செய்றீர்களா என கேட்டு திட்டிவிட்டு போய்விட்டார்கள்.
சாப்பாடு கூட தேனி சிறையில் சரியில்லை. சாப்பாட்டில் புழு இருக்கிறது. எங்களை சித்ரவதை செய்கிறார்கள். எங்களை உறவினர்கள் வந்து பார்க்கவும் விட மாட்டேங்கிறார்கள். அவர்கள் கேட்டால், பனீஷ்மென்ட் என்கிறார்களாம். நாங்கள் சிறையில் எந்த தவறையும் செய்யவில்லை. சிறையிலேயே இருந்தால் என்னை யாராவது ஏதாவது செய்துவிடுவார்களோ என எண்ணிதான் சிறையில் இருந்து தப்பினேன்.
நீதிபதியிடம் நடந்த உண்மைகளை சொல்லி சரண்டாகிறேன். மற்றபடி போலீஸுக்கோ பொதுமக்களுக்கோ நான் இடையூறாக இருக்க மாட்டேன். என்னை சுட்டு பிடிக்க போவதாக சொல்கிறார்கள். எனக்கு திருமணமாகி எனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார். நான் வாழ ஆசைப்பட்டு திருந்தியிருக்கிறேன். என் தம்பியை முக்கிய குற்றவாளி என்கிறார்கள்.
என் தம்பிக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நான் செய்த தவறால் எனது மனைவி, எனது குழந்தையின் வாழ்க்கை நாசமாக போகக் கூடாது. நாங்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் தப்பினோம். கூட்டாகவே தப்பித்தோம். நானும் எனது தம்பியும் சிக்காமல் இருப்பதால் எங்கள் மீது எல்லா பழியையும் போடுகிறார்கள். நாங்கள் கூட்டமாக உட்கார்ந்திருந்ததை சிறை கேமராவில் கூட பாருங்கள். ஆனால் எங்கள் இருவர் மீது மட்டும் பழி போடுகிறார்கள். நான் வாழணும் என ஆசைப்படுகிறேன். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இவ்வாறு மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.