×

இது மட்டும் நடந்தால் NDA கூட்டணியில் இருந்து விலகுகிறோம் - அன்புமணி சவால்..!

 

சென்னை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கர்நாடகத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் ஏற்பட்டால் அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும். மேகதாது அணையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை அங்கீகரிக்கவும் இல்லை. அங்கீகரிக்கப்படாத ஒரு திட்டம் குறித்து கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பிரதமரிடம் அழுத்தம் கொடுத்து மேகதாது அணையை கட்டக்கூடாது. அதற்கான விரிவான திட்ட அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

தற்போது கர்நாடக அணைகளில் 62 டிஎம்சி தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த மாதத்தில் 2 முறை கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு தங்களிடம் தண்ணீர் இல்லை எனவும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் கூறி வருகிறது.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன பயன் உள்ளது? மேகதாது அணை கட்டப்படுவதற்கு முன்பாகவே தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. நாளை மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால் தமிழ்நாட்டில் குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே தமிழக முதல்வர் கர்நாடகத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது.

முதலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். இது தவெக பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சனை. இந்த விவகாரத்தை வேறு விதமாக கர்நாடக அரசு கொண்டு செல்கிறது. அந்த சூழ்ச்சியில் தமிழக முதல்வர் சிக்கிக்கொள்ளக்கூடாது.

மத்திய அரசில் உள்ள பாஜகவும் கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸும் இந்த விவகாரத்தில் கூட்டுச் சதி செய்கின்றனர். அந்த சதியில் தமிழ்நாடும், தமிழக முதல்வரும் சிக்கிக்கொள்ளக்கூடாது. இது ஒட்டுமொத்த விவசாயிகள் மற்றும் தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக முதல்வரை யார் வழிநடத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இது தவறான போக்கு கண்டிக்கத்தக்கது. எனவே இதுபோன்ற நடவடிக்கையை தமிழக முதல்வர் தவிர்க்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாநிலங்களவையில் நான் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். அந்தப் பதிலில் உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு முன்பு தமிழ்நாட்டின் அனுமதியைப் பெற வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக டெல்லியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களிடமும் பேசி வருகிறேன்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் பல்வேறு விஷயங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளன. 1892 மற்றும் 1924 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படவில்லை என்றும், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் அவை தொடர்ந்து நடைமுறையில் உள்ளன என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேல்மடை மாநிலத்தில் எந்தவிதமான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கீழ்மடை மற்றும் கடைமடை மாநிலங்களின் அனுமதியின்றி மேற்கொள்ள முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கிடையே பாயும் ஆறுகளுக்கும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கிடையே பாயும் ஆறுகளுக்கும் இதுபோன்ற ஒப்பந்தங்களே தீர்வாக உள்ளன.

எனவே இந்த ஒப்பந்தங்களை மீறி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பும் இதைத்தான் கூறுகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பும் இதைத்தான் தெளிவுபடுத்துகிறது. ஆனால் இந்த விவகாரத்தை திரித்து தவறான தகவல்களை மத்திய இணை அமைச்சர் தெரிவித்து வருகிறார். இதனை கண்டிக்கிறோம் இதுபோன்ற தவறான தகவல்களை சொல்லக்கூடாது.

தமிழக முதல்வர் எங்களையும் அழைத்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டும் என்பதைத்தான் நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிரதமரை சந்தித்து மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மாணிக்கம் தாகூர் தனது தலைவர் ராகுல் காந்தியிடம் இதுகுறித்து தெரிவிக்க தைரியம் இருக்கிறதா? அந்தமான், நிகோபார் தீவில் மத்திய அரசு செயல்படுத்தும் கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பாக காடுகள் அழிக்கப்படுவதால் அந்தத் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று ராகுல் காந்தி கூறினார்.

அதேபோல் மேகதாது அணை கட்டப்பட்டால் சுமார் 12,500 ஏக்கர் காடுகள் அழிக்கப்படும் என்றும், 3 புலிகள் சரணாலயங்கள் பாதிக்கப்படும் சூழல் வரும். இதனால் மேகதாது அணை கட்டக்கூடாது என்று சொல்வதற்கு ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா?

ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி மேகதாது அணை தமிழ்நாட்டுக்கு எதிரானது, அணை கட்டக்கூடாது என்று கூறினால் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்" என்று அன்புமணி சவால் விடுத்தார்.