இது மட்டும் நடந்தால் கனிமொழி தனிக்கட்சி ஆரம்பிப்பார்: கோவையில் அண்ணாமலை பேச்சு..!
பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க. அரசு மற்றும் அதன் தலைவர்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
2026 தேர்தலில் தி.மு.க தோற்றால், கனிமொழி தனிக்கட்சி ஆரம்பித்துவிடுவார். முதல்வர் ஸ்டாலின் ஒரு பக்கம் சென்றுவிடுவார். அதன் பிறகு தி.முக. யாரிடம் செல்லும் என்றே தெரியாது. அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலும் தற்போது வெளியே வந்து கொண்டிருக்கிறது. தி.மு.க இனி எக்காலத்திலும் ஆட்சிக்கு வராது என்று அவர் சாடினார்.
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருவதாகவும், செந்தில் பாலாஜியின் தரம் தாழ்ந்த பேச்சுக்களுக்குத் தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். சிறையில் இருந்த காரணத்தினால் பயத்தில் பேசி வருவதாகவும், கோவை மற்றும் கரூரில் தி.மு.க சரித்திரம் காணாத தோல்வியைச் சந்திக்கும் என்றும் அவர் கூறினார். அமைச்சர் காந்தி வேட்டி, சேலை வழங்கியதில் செய்த 160 கோடி ரூபாய் ஊழலை ஆதாரத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். தி.மு.க பைல்ஸ் குறித்து பா.ஜ.க அலுவலகத்திற்கே வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆட்சி மாறினால் இவர்கள் அனைவரும் புழல் சிறைக்குச் செல்வது உறுதி என்றார்.
'ஜனநாயகன்' திரைப்படம் வெளியானது தவறு என்று குறிப்பிட்ட அவர், அந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் ஆதவ் அர்ஜுனுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். தான் ஒரு ரசிகனாகத் திரையரங்கிற்குச் சென்று அந்தப் படத்தைப் பார்ப்பேன் என்றும் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தத் தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மக்கள் தி.மு.கவின் வன்முறை மற்றும் ஊழல் அரசியலை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அண்ணாமலை நம்பிக்கையுடன் தெரிவித்தார்.