இது மட்டும் நடந்தால் தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறிதான் : பாஜக நிர்வாகி கஸ்தூரி கணிப்பு..!
கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த நிர்வாகி கஸ்தூரி,
"தவெகவின் நூறு நாள் ஆட்சி மீது தமிழக மக்கள் பெரிய அளவில் விமர்சனம் வைக்கவில்லை. மக்கள், குறிப்பாக பெண்கள் உங்கள் (முதலமைச்சர் விஜய்) மீது அபார நம்பிக்கையை வைத்தள்ளனர். அதே நேரத்தில், போதை கலாச்சாரத்தை ஒழிப்பதற்கும், பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கும் இவ்வளவு கால அவகாசத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.
பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டதாக முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். இது தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு. இந்த திட்டத்துக்காக 90 சதவீதம் வரை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால், முதலமைச்சர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இது தமிழக பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும். எனவே, தனது அறிவிப்பு குறித்து முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பரந்தூர் பகுதி மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும். முதல்வரின் இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் சந்தோஷப்படுவதற்கு பதிலாக, எதிர்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆகவே, இதனை சந்தேகக் கண்ணுடன் முதல்வர் விஜய் பார்க்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு நிதி நிலைமை ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை. பொருளாதார வளர்ச்சி இல்லாமல், எப்படி வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியும்?" என கஸ்தூரி கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, தவெக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து பயணிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி, "அது சந்தேகம்தான். முதலமைச்சர் விஜய்யை நாளைய பிரதமர் என தவெகவினர் அழைப்பதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அதேபோல, மகப்பேறு விடுப்பு விவகாரத்திலும் தவெகவை அக்கட்சி விமர்சித்திருக்கிறது.
ஒருவேளை, அடுத்து நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி அடைந்து பெரும்பான்மை பெற்று விட்டால், காங்கிரஸுடன் கூட்டணியில் தொடருமா என்பது கேள்விக்குறிதான். மேலும், தங்கள் அமைச்சரவையில் உள்ள இரு காங்கிரஸ் அமைச்சர்களையும் தவெக வெளியேற்ற வாய்ப்புள்ளது" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "பெண்கள் உடை விஷயம் குறித்து அமைச்சர் கீர்த்தனா அளித்துள்ள பதில் அருமையாக இருந்தது. பெண்கள் குறித்து மோசமாக விமர்சனம் செய்பவர்களுக்கு செருப்படி கொடுத்தது போல கீர்த்தனா பதில் கொடுத்திருக்கிறார்" என கஸ்தூரி தெரிவித்தார்.