இது மட்டும் நடந்தால் கோவைக்கு மெட்ரோ ரயில் நிச்சயமாக வரும்: வானதி சீனிவாசன்..!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
நேற்றிலிருந்து திமுக அரசும், அதன் கூட்டணியில் இருப்பவர்களும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதியை நிராகரித்திருக்கிறது, வேண்டுமென்றே தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது, பிரதமர் மோடி தமிழர்களுக்கு எதிராக இருக்கிறார் என்கிற பொய் பிரசாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த நவம்பர் 14 அன்று மத்திய அரசு மாநில அரசுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி இருக்கிறார்கள். அதை முழுதாகப் படிக்காத திமுக அரசு எப்படி அரைகுறையாக அரசை நடத்துகிறார்களோ அப்படி அரைகுறை அறிக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு, வேண்டுமென்றே பிரதமர் மோடிக்கு களங்கம் கற்பிக்கும் விதத்தில் பொய் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறது.
ஒரு நகரத்திற்கு மெட்ரோ ரயில் வரவேண்டும் என்றால் அதற்கு 2017 கொள்கைகளின் படி சில வரையறைகள் உண்டு. அதில் மிகத் தெளிவாக மக்கள் தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள். திட்ட அறிக்கையைத் தயார் செய்யும்போதே அதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். கோவையில் சுமார் 257 சதுர கிலோ மீட்டர் வர உள்ள மெட்ரோ திட்டம் குறித்து திமுக அரசு சரியாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மக்கள் தொகை, மெட்ரோ பயன்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு தெளிவான விளக்கத்தை மத்திய அரசிடம் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசு வரையறை என்பது தனிப்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமல்ல. அது பொதுவான கொள்கை. இதை முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே இந்த அறிக்கையை கொடுத்துள்ளார்கள்.
கோவை மெட்ரோ திட்டம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிக் பஜார், நஞ்சப்பாசாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் நெரிசலான பகுதிகள். இங்குள்ள கடைகளை இடிக்க வேண்டும். கடைகளை இடிக்கும் நோக்கில் திட்டங்களை போட்டு மத்திய அரசிடம் கொடுத்துள்ளார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் பத்து தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற விடாத மக்களைச் சும்மா விட்டுவிடுவோமா? உங்களுக்கு மெட்ரோவைக் கொடுத்துவிடுவோமா என்ற பழிவாங்கும் எண்ணத்துடன் வேண்டுமென்றே கோவை மக்களை வஞ்சிப்பதற்காக இப்படி ஒரு திட்ட அறிக்கையைத் தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது.
அதே சமயம் பிற மாநிலங்களுக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாட்னா போபால் எல்லாம் சுற்றுலாவை மையப்படுத்தியும் போபால் கேப்பிட்டல் சிட்டி என்பதால் அதனை மையப்படுத்தியும் அனுமதி கேட்டுள்ளார்கள். மேலும் அந்த நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை எல்லாம் சேர்த்து திட்ட அறிக்கை கொடுத்து அனுமதி பெற்றுள்ளார்கள்.
பாஜக கோவை மக்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதி என்பது போராட்டம் நடத்துவதாக நாடகம் நடத்தும் அரசு வீட்டுக்குப் போன பிறகு, 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்ததற்குப் பிறகு, இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதற்குப் பிறகு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் கொண்டு வருவோம்” என்றார்.