ஒரு ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் நெருப்பில் குதிப்பேன்..! – அமைச்சர் துரைமுருகன் பகிரங்க சவால்..!
வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளித்தான்பட்டறை பகுதியில் திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளருமான துரைமுருகன் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு பொதுமக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிலம்பாட்டம், வாள் வீச்சு, கத்திச்சண்டை போன்ற பாரம்பரிய வீர விளையாட்டுகளுடன், மேளதாளங்கள், பொம்மை நடனங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு உரையாற்றிய துரைமுருகன், "நான் கடந்த 40 முதல் 50 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருக்கிறேன். இந்த காலகட்டத்தில் நான் யாரிடம் இருந்தும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியது கிடையாது.
அப்படி, நான் லஞ்சம் வாங்கியதாக யாரேனும் நிரூபித்தால், இங்கேயே நெருப்பில் குதித்து உயிரை விட தயாராக இருக்கிறேன். அதேபோல், ஒரு பெண்ணிடம் நான் தவறாக நடந்து கொண்டதாக யாரேனும் கூறினாலே உயிரை விட்டு விட தயங்க மாட்டேன்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு ஒழுக்கமும், நேர்மையும்தான் மிகவும் முக்கியம். மக்களுக்கு பயந்து தொண்டு செய்ய வேண்டும். மக்கள் நம்மை நம்பி பொறுப்புகளை வழங்குகிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவு நீடிக்கும்.
இத்தனை ஆண்டுகள் உங்கள் சேவகனாகப் பணியாற்றியுள்ளேன். இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்" என துரைமுருகன் கூறினார்.
காட்பாடி தொகுதியில் 13-வது முறையாக துரைமுருகன் போட்டியிடுகிறார். இதில் காட்பாடியில் மட்டும் 11-வது முறையாக அவர் போட்டியிடுகிறார். கடந்த 1977, 1980 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு துரைமுருகன் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.