நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை - டிடிவி தினகரன் அதிரடி..!
2026 சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், "2026 சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிட போவது இல்லை. என்னுடன் இருப்பவர்களை வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்களை அமைச்சராக பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது; அதற்காக அழுத்தம் தர மாட்டேன்” என கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி துரோகி என குறிப்பிட்டு விமர்சித்தாக தெரிகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியால் முதல்வராக முடியாது என டிடிவி தினகரன் வெளிப்படையாகவே கூறியிருந்தார். ஆனால், பாஜக மேற்கொள்ள முயற்சியின் காரணமாக, டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்தார்.
காரணம் என்ன?
அதன்பிறகு, ஒருவரைக்கொருவர் பாராட்டிக் கொண்டனர். திமுகவை வீழ்த்தும் ஒன்றை குறிக்கோளுடன் தாங்கள் சேர்ந்துள்ளதாக இருவரும் கூறினர். இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஏனென்றால், சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடும் பட்சத்தில், அது எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவினருக்கும் சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என்பதால், தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.
ஆனால், அமமுக கட்சிக்கு அமைச்சரவையில் பங்கு தர வேண்டும் என சூசகமாக கூறியுள்ளார். இதற்கிடையே, டிடிவி தினகரன் பாஜக அதிமுக ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கு முன்னதாக திமுக, தவெக கட்சியினருடன் டிடிவி தினகரன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பாஜகவின் அழுத்தத்தின் பெயரில் என்டிஏ கூட்டணியில் இணைந்ததாக கூறப்படுகிறது.
அவர் மாநிலங்களவை உறுப்பினராகும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையிலும் கூட இடம்பெறலாம் கூறப்படுகிறது. என்டிஏ கூட்டணிக்கு ஆதரவாக சசிகலா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டிடிவி தினகரனின் வருகை, சசிகலாவின் பிரச்சாரம் தென் மாவட்டங்களில் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை தரும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.