☰
×

என் அப்பாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்! – சொகுசு கார் விபத்தில் தந்தையை இழந்த மகளின் உருக்கமான சபதம்!

 

கேரள மாநிலம் எறணாகுளம் மாவட்டம் சேரானல்லூரில் நடைபெற்ற ஒரு துயரமான சம்பவம் ஒட்டுமொத்த கேரள மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற பென்ஸ் கார் மோதியதில், சாலையோரக் கடை நடத்தி வந்த ஜெயபாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே, விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

ஆனால், தனது தந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்திலிருந்து ஒரு அடிகூட பின்வாங்கப் போவதில்லை என்ற உறுதியுடன் இருக்கிறார் அவரது மகள் பத்ரகீர்த்தி.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தங்களது நெஞ்சில் கத்தியால் குத்தியது போல் இருப்பதாகக் கூறியுள்ள பத்ர கீர்த்தி, இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடத் தங்களது குடும்பம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். "என் தந்தையின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை முடிவடைய இருந்த நிலையில், அதற்குச் சற்று முன்பாகவே இந்தத் தீர்ப்பு வெளியானது. எங்கள் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம்; ஆனால் அது நடக்கவில்லை" என்று அவர் கண்ணீர்மல்கக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக வியாழக்கிழமை இரண்டு நீதிமன்றங்களில் முக்கிய விசாரணைகள் நடைபெற்றன. செஷன்ஸ் நீதிபதியான தந்தையின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்த அதே வேளையில், 17 வயது சிறுவனுக்கு சிறார் நீதி வாரியம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசுத் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை எர்ணாகுளம் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. பிற்பகலில் இந்த மனுவை விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், 17 வயது சிறுவன் தொடர்ந்து ஜாமீனில் இருக்க அனுமதி அளித்தது.

17 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தற்போது கேரள உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார் பத்ரகீர்த்தி.கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவில் குறைபாடுகள் இருப்பதாகவும், குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் சாட்சிகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்க வாய்ப்புள்ளதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையை இழந்த துயரம் ஒருபுறம் இருந்தாலும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற உறுதியுடன் தொடர்ந்து போராடி வருகிறார் இந்த மகள்.

“என் அப்பாவுக்கு நீதி கிடைக்கும் வரை எத்தகைய எல்லைக்கும் சென்று போராடுவேன்” என்ற பத்ரகீர்த்தியின் உறுதியான வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

கேரளாவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், தந்தைக்காக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிப் போராடும் மகளின் உறுதி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது