×

பயத்துலதான் எல்லாரையும் குத்தினேன்..! - 3 பேரை கொன்றுவிட்டு திருவண்ணாமலைக்கு தப்பிய காதலர் ஜோடி..!!

 

பெங்களூரு அருகே கே.ஆர். புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமசுந்தரம் (55) - முத்துலட்சுமி (48) தம்பதியர். இவர்களுக்கு ஸ்வேதா (24), சுப்ரியா (20) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். ஸ்வேதாவை தவிர மற்ற 3 பேரும், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 22ஆம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலம் சீகேஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரத் தாக்குதலில் முத்துலட்சுமி, அவரது மகள் சுப்ரியா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். குடும்பத் தலைவர் சோமசுந்தரம் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சோமசுந்தரத்தின் மூத்த மகளான ஸ்வேதாவும், அவரது காதலன் கென்னத்தும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்குக் குடிவந்தது தெரியவந்தது. மகள் காதலனுடன் தனியாக வசிப்பதை அறிந்த தந்தை சோமசுந்தரம், தாய் முத்துலட்சுமி மற்றும் தங்கை சுப்ரியா ஆகியோர் அவரைச் சந்தித்துப் பேச வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், இறுதியில் கொடூரக் கொலையாக முடிந்துள்ளது.

 சொந்தக் குடும்பத்தையே கொன்றுவிட்டு ஸ்வேதா தனது காதலனுடன் பைக்கில் தப்பியோடித் தலைமறைவானார். இந்த முக்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட இருவரையும் பிடிக்கப் போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி புதுச்சேரி ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிய ஸ்வேதாவை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

போலீஸ் காவலில் ஸ்வேதா அளித்த வாக்குமூலத்தில், "எனது வீட்டில் எனக்கு எவ்வித சுதந்திரமும் அளிக்கப்படவில்லை. இதனால் கடுமையான மன அழுத்தத்திலும், தனிமையிலும் வாழ்ந்து வந்தேன். அந்த சமயத்தில்தான் கென்னத்தை காதலித்தேன். ஆனால், எங்கள் காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பெற்றோருக்குத் தெரியாமல் காதலனுடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தேன்" என்று கூறியுள்ளார்.

வாக்குமூலத்தின் தொடர்ச்சியாக, "வீட்டிற்கு வந்த எனது தாயைக் கொன்ற பிறகு, அங்கு வந்த தங்கை சுப்ரியாவையும் கத்தியால் குத்தினேன். அவளது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை சோமசுந்தரத்தையும் சரமாரியாகக் குத்தினேன். மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தின் காரணமாகவே தந்தை மற்றும் தங்கையையும் கொலை செய்ய வேண்டியதாயிற்று" என்று ஸ்வேதா தெரிவித்துள்ளார். கொலைக்குப் பின் இருவரும் பைக்கில் திருவண்ணாமலைக்குத் தப்பியுள்ளனர். அங்கு பைக் பழுதானதால் ஸ்வேதாவை மட்டும் புதுச்சேரி பேருந்தில் ஏற்றிவிட்டு கென்னத் தலைமறைவாகியுள்ளார்.

 தப்பியோடிய கென்னத்தைப் பிடிக்கத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீசார் இணைந்து 6 தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் புதுச்சேரி அண்ணா சாலைப் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று இரவு 10 மணியளவில் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாகச் செயல்பட்ட உருளையன்பேட்டை போலீசார், அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொண்டு, நள்ளிரவு 1 மணியளவில் கென்னத்தை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

காதலன் கென்னத் கொலை செய்யவில்லை என ஸ்வேதா தன் வாக்குமூலத்தில் நாடகமாடினார். ஆனால், தந்தை சோமசுந்தரம் உயிரிழப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு போலீசாரிடம் அளித்த மரண வாக்குமூலம் இந்த வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், "கென்னத்தான் எங்களைக் கத்தியால் குத்தினார்" என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கொடூரக் கொலையில் காதலன் கென்னத்தின் நேரடிப் பங்கு உறுதியாகியுள்ளதால், அவரிடம் போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.