என் மகளுக்கு நீதி வேண்டும்.. அந்தக் கொலையாளிக்கு மரண தண்டனை கொடுங்க..! - கதறும் தந்தை.
விளாத்திகுளம் அருகே மார்ச் 10- ஆம் தேதி காணாமல் போன 12-ஆம் வகுப்பு மாணவி, மறுநாள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.
எனினும், ஒன்பது நாட்களைக் கடந்த போதும் மாணவியின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் காவல்துறையினரால் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவர்களது டிஎன்ஏவை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருந்தாலும், குற்றமிழைத்தவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஒரு வாரத்திற்கு மேலாக மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
அதனால், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டு, விசாரணை தீவிரமடைந்தது. அந்த வகையில் வேடநத்தம் கிராமம், காட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று அந்த பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சோதனை செய்ததில், அது ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் பகுதியிலிருந்து மர்மநபரால் திருடி கொண்டுவரப்பட்டதும், அது தொடர்பாக ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அதையடுத்து, ராமநாதபுரம் சென்ற காவல்துறையினர், பைக் திருட்டு தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், பைக் திருட்டில் ஈடுபட்டது அடையாளம் தெரியாத நபர் என்பது தெரியவந்தது. இதனால், ராமநாதபுரத்தில் பைக்கை திருடிய நபர், மாணவி கொலை செய்யப்பட்ட காட்டுப்பகுதிக்கு எதற்காக சென்றார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
இதுபோன்ற சூழலில், பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் (வயது 30) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் சாயல்குடியைச் சேர்ந்தவர் என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த மார்ச் 10- ஆம் தேதி எனது மகள் காணாமல் போனார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் தவறாகப் பேசி அலைக்கழித்தனர். நாங்களே தேடிப் பார்த்து தான் உடலை எடுத்தோம். தற்போது குற்றவாளி கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகின்றனர். இனிமேல் இதுப்போன்ற சம்பவம் நடக்கக்கூடாது. அனைத்து காவல்துறை அதிகாரிகளும் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே கடைசியாக இருக்கட்டும்.குற்றவாளிக்கு மரண தண்டனை தான் வழங்க வேண்டும். இனிமேல் வெளியே வரக்கூடாது. நாளை எனது மகள் உடலை வாங்க நானும் எங்களது கிராமத்தினரும் முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.