×

“தூய்மை பணியாளரை மிரட்டி விசிலடிக்க வைத்தேன்”- தவெக நிர்வாகி 

 

தூய்மை பணியாளரை மிரட்டி விசிலடிக்க வைத்ததாக தவெக நிர்வாகி வி.எஸ்.பாபு பகிரங்கமாக கூறியுள்ளார்.


சென்னை பெரம்பூரில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தவெக நிர்வாகி வி.எஸ்.பாபு, “விசில் சின்னத்தை பார்த்து அனைவரும் பயப்படுகிறார்கள். தூய்மை பணியாளர்களை விசிலடிக்க வேண்டாம் என கார்ப்பரேசன் அறிவுறுத்தியுள்ளது. விசில் அடிக்காவிடில் உதைப்பேன் என கூறியதும் தூய்மை பணியாளர் விசில் அடித்துவிட்டார்” எனக் கூறினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி விட்டன. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களம் காண உள்ளது. இதனிடையே, அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் அண்மையில் விசில் சின்னத்தை ஒதுக்கியது. இதையடுத்து, தவெக பொதுக்கூட்டங்களிலும், பிரச்சாரத்திலும் அக்கட்சியினர் விசில் ஒலி எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தவெகவினரின் இந்த செயலை திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பொதுவாக, தமிழகம் முழுவதுமே தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று விசில் ஒலி எழுப்புவர். அந்த சத்தத்தை கேட்டதும், வீட்டில் உள்ளவர்கள் குப்பையை எடுத்து வந்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுப்பார்கள். தற்போது தூய்மை பணியாளர்கள் யாரும் விசில் அடிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.