வாய் கொழுப்பில் பேசிவிட்டேன்...பிரதமர் குறித்து பேசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட நொய்டா பெண்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சனையை முன்வைத்து டில்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், சமூக விரோதிகள், குற்ற பின்னணி கொண்டவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கலவரத்தை ஏற்படுத்தினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்கப்பட்டனர். அரசு வாகனங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.
இந்த சம்பவங்களின் போது, தேசவிரோத கோஷங்களை ஒரு கும்பல் எழுப்பியது. அதில் பெண் ஒருவர், டிவி நேரலை ஒளிபரப்பில் பிரதமர் மோடிக்கு எதிராக அருவருக்கத்தக்க வகையில் கோஷங்களை எழுப்பி வசை பாடினார். பிரதமருக்கு எதிராக அந்தப் பெண் பேசுகிறார் என்பதால், அவரது அருவருக்கத்தக்க பேச்சின் வீடியோவை எதிர்க்கட்சியினர் தங்களால் முடிந்தவரை சமூக வலைதளங்களில் பரப்பினர். கேட்கவே நா கூசும் வகையிலும், அச்சில் ஏற்ற முடியாதபடியும் இருந்த அவரது வசை, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில் குறிப்பிட்ட அந்தப் பெண் உ.பி., மாநிலம் நொய்டாவில் ஒரு சலூனில் வேலை பார்ப்பவர் என்றும், பெயர் ருச்சிதா சிங், 25, என்றும் தெரியவந்தது. தான் பேசிய வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து உஷாரான அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மூன்று நாட்களாக தலைமறைவாகி விட்டனர்.
அந்தப் பெண் பேசிய, அருவருக்கத்தக்க, சட்டவிரோத பேச்சுக்காக நொய்டா போலீசார் மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பின்னர் டில்லி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று நொய்டாவில் பதுங்கியிருந்த அந்தப் பெண்ணை போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். வீடியோவில் அந்த பெண் கூறியதாவது: போராட்டத்தின்போது சிலரின் தூண்டுதலுக்கு ஆளாகி, பிரதமருக்கு எதிராகப் பல மோசமான கருத்துகளைக் கூறினேன். எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்தது மன்னிக்க முடியாத செயல். நான் பல மோசமான விஷயங்களைப் பேசிவிட்டேன்இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறு. நான் ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கோருகிறேன். எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. என்னால் என்னையே பார்க்க முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.இவ்வாறு வாய் கொழுப்பில் பேசிய பெண் மன்னிப்பு கோரியுள்ளார்.