×

'உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் மோனு..' தங்கை நினைவால் தவிக்கும் சிம்ரன்..! 

 

90களில் தமிழ் சினிமாவின் டாப் வான்டட் ஹீரோயினாக கலக்கியவர் நடிகை சிம்ரன். அஜித், விஜய், சூர்யா, விக்ரம், மாதவன், விஜயகாந்த், ரஜினி, கமல், அர்ஜுன், முரளி என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் சிம்ரன். தனது சிறப்பான நடிப்பு, வசீகரமான தோற்றம், அசத்தலான டான்ஸ் என அனைவரையும் இடுப்பழகி சிம்ரன் என கொண்டாட வைத்தவர். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். 2003ம் ஆண்டு தீபக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருப்பினும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். 

அம்பிகா - ராதா, நக்மா - ஜோதிகா, ஊர்வசி - கல்பனா, ஷாலினி - ஷாமிலி, ப்ரீத்தா - ஸ்ரீதேவி என பல பிரபலமான சகோதரிகள் தமிழ் சினிமாவை கலக்கினார். அவர்களின் வரிசையில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு சகோதரிகள் நடிகை சிம்ரன் - மோனல். 

நடிகை சிம்ரனின் தங்கை மோனல் 'பார்வை ஒன்றே போதுமே' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் 'பத்ரி' திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் லவ்லி, சமுத்திரம், விவரமான ஆளு, சார்லி சாப்ளின், பேசாத கண்ணும் பேசுமே உள்ளிட்ட  திரைப்படங்களில் நடித்திருந்தார். 

இறுதியாக குணால் ஜோடியாக 'பேசாத கண்ணும் பேசுமே' திரைப்படத்தில் நடித்திருந்தார் மோனல். அப்படம் வெளியான சில நாட்களிலேயே மோனல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2002ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்ட மோனல் இறந்து 24 வருடங்கள் உருண்டோடிவிட்டன. தங்கையின் நினைவாக நடிகை சிம்ரன் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தியிருந்தார். 

மறைந்த நடிகை மோனலின் 24-வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சகோதரியும் பிரபல நடிகையுமான சிம்ரன் சமூக வலைதளத்தில் உருக்கமான இரங்கலை பதிவு செய்துள்ளார். "உன்னை நினைக்காத நாள் இல்லை, உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் மோனு" என அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்த 2002-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட மோனல், இன்றும் தமிழ் ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.