×

ஜல்றா அடித்துத் தான் ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பதவியே எனக்கு அவசியம் இல்லை - அண்ணாமலை..! 

 

 தவெக கொள்கை பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “திமுக இளைஞர் அணி கூட்டம் நடத்தியபோது இவ்வளவு விதிமுறைகள்,கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதா? என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தவெக நடத்தும் கூட்டத்திற்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஈரோட்டில் நாளை நடக்கவுள்ள தவெக கூட்டத்திற்கு 50-க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போலீசால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தடுக்க முயல்கின்றனர். ஆனால், அனைத்தையும் தாண்டிதான் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

விஜய் ஈரோட்டிற்கு சாலை மார்க்கமாக வருகிறாரா அல்லது விமானம் மூலம் வருகிறாரா என்பது நாளைக்கு தான் தெரியும். மேலும் ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்தில் க்யூஆர் கோடு இருக்காது என செங்கோட்டையன் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். விருப்பமுள்ள அனைத்து பொதுமக்களும் கூட்டத்தில் பங்கேற்கலாம்" என்றார்.

மேலும் பேசிய அவர், “மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஊர்வலம் வரும்போது இஸ்லாமிய சகோதரர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். சபரிமலையிலும் கூட பக்தர்கள் மசூதிக்கு சென்று வருகிறார்கள். எனவே, தமிழ்நாடு மக்களும், திருப்பரங்குன்றம் மக்களும் ஒற்றுமையாக தான் உள்ளார்கள். ஆனால், பாஜக மற்றும் திமுகவினர் இதில் ஆதாயம் தேட விரும்புகின்றனர்," என்றார்.

"விஜய் அமைதியாக இருப்பதை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஆனால், விஜய் கூறிய டயலாக் அண்ணாமலைக்கு நன்றாக பொருந்தும். அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால், அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார். எங்கள் கட்சி தலைவர் எப்போ எதை பேச வேண்டுமென்று அவர் சொல்ல தேவையில்லை. தலைவருக்கு தெரியும்” என்று பதிலடி கொடுத்தார்.

மேலும்,"தேர்தல் கூட்டணி தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதை விஜய் பார்த்து கொள்வார். விஜய்க்கு மக்களை சந்திக்க அதிக விருப்பம் உள்ளது. ஆனால் பாதுகாப்பு மட்டும்தான் ஒரே பிரச்சனை. அதற்கு காவல் துறையும் ஒத்துழைப்பு தருவதில்லை, அரசும் காவல் துறைக்கு போதிய சுதந்திரத்தை அளிப்பதில்லை. மேலும் விஜய் எடுத்த வீடியோக்களை ‘ஜனநாயகன்’ படத்திற்காக எடுத்து கொண்டார்கள் என்று சிலர் கூறிவரும் கருத்து ஒரு அருவருக்கத்தக்க விமர்சனம். அதுபோன்ற ஒரு தேவை எங்களுக்கு இல்லை. இதுபோன்ற அருவருக்கத்தக்க பிரச்சாரங்களை திமுகவால் தான் செய்ய முடியும்” என்று அருண்ராஜ் கூறினார்.

இதற்கிடையே அருண்ராஜிற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். நடிகருக்காக அரசு பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜால்ரா அடிப்பவன் நான் இல்லை என்றும் ஜால்ரா அடித்து பதவியில் இருக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன். நான் யாருக்கும் ஜால்றா அடிக்க மாட்டேன். இன்று ஒரு கட்சியில் சேர்ந்ததற்காகச் சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிப்பது போல நான் ஜால்றா அடிக்க மாட்டேன். நான் நாட்டு மக்களுக்கும் மோடிக்காகவும் மட்டுமே விசுவாசமாக இருப்பேன். சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்க நான் அரசு பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஒரு உன்னதமான ஒரு கோட்பாட்டுக்காக வந்திருக்கிறேன்.

வரும் காலத்திலும் எனக்குப் பிரச்சினை வரும். ஆனால், மக்களுக்காகவே நான் பிரச்சினை சந்திக்கிறேன். எனக்குப் பெருமை தான். ஜல்றா அடித்துத் தான் ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்றால் அந்தப் பதவியே எனக்கு அவசியம் இல்லை" என்றார். என்டிஏ கூட்டணிக்குள் ஓபிஎஸ் வருவாரா என்ற கேள்விக்கு அவர், "இங்கே அது குறித்துப் பேசினால் தவறாகிவிடும். நான் கண்டிப்பாக இது குறித்து பேசுகிறேன்" என்று மட்டும் பதிலளித்தார்.