"உயிரோட வீடு திரும்புவேனான்னு தெரியல!" – கதறி அழுத கணவன்...உக்ரைன் எல்லையில் தவிக்கும் இந்திய இளைஞர்!
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், சிரிகொண்டா மண்டல் பகுதியை சேர்ந்தவர் சிர்சு அசோக். தோட்டப் பராமரிப்பு வேலை வழங்குவதாக கூறி, வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் மூலம் அவர் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகு அவரை ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்ததாக கூறப்படுகிறது.
தோட்ட வேலைக்காகச் சென்ற அசோக்கிற்கு துப்பாக்கியால் சுடுவது, வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வது ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உக்ரைன் போரில் முன்களப் பகுதிகளில் அவர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சிர்சு அசோக் செல்போன் மூலம் தனது மனைவி சரிதாவுக்கு குரல் பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தன்னைச் சுற்றிலும் பலர் இறந்துவிட்டதாகவும், தானும் கடுமையான ஆபத்தில் சிக்கி இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த குரல் பதிவில், "பான்ஸ்வாடாவைச் சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கவும். என்னுடன் வந்தவர்களில் 50 பேர் இறந்து விட்டனர். இப்போது நாங்கள் இரண்டு பேர் மட்டுமே மிச்சமிருக்கிறோம். எனக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், என்னை நடக்குமாறு ராணுவத்தில் வற்புறுத்துகிறார்கள்” என சிர்சு அசோக் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் கூறிய உயிரிழப்புகள் குறித்த தகவல்களை ஈடிவி பாரத் ஊடகத்தால் உறுதிப்படுத்த இயலவில்லை.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு வேலைக்கு சென்று கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டு காயமடைந்துள்ள தங்கள் மகனை உடனடியாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என அசோக்கின் குடும்பத்தினர், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், தெலங்கானா மாநிலம், பான்ஸ்வாடாவைச் சேர்ந்த அஃப்சல் கானின் மனைவி ஜமீலா பேகத்துக்கும் சுமார் 10 நாட்களுக்கு முன்பு அவரது கணவரிடமிருந்து குரல் பதிவு வந்துள்ளது. அதில், தான் உயிருடன் வீடு திரும்புவேனா என்பது தெரியவில்லை என அஃப்சல் கான் அழுதபடி கூறியிருந்தார். இதனால், தற்போது அவரது நிலை என்ன என்பது தெரியாததால் குடும்பத்தினர் தவிப்பில் உள்ளனர்.
ஏற்கெனவே இந்தியர்கள் யாரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம் என மத்திய அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றுவதாகக் கூறப்படும் 69 இந்தியர்களின் நிலை குறித்தும் ரஷ்யாவிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
ரஷ்ய ராணுவத்திலிருந்து இதுவரை 139 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், உக்ரைன் போரில் 51 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள 'பிரவாசி பிரஜாவாணி' அமைப்பிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அண்மையில் புகார் அளித்தனர். அதன்படி, தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 10 பேர் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்டதாகவும், எஞ்சியவர்களை மீட்க இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.