×

இனி ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது; குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்மார்ட் கண்ணாடிகளை பயன்படுத்த போலீசார் முடிவு..!  

 

 டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில், குற்றப்பின்னணி கொண்ட 2500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதை போலீசார் கண்டறிந்தனர். அவர்களை கண்டறிய உதவிகரமாக இருந்தவை, போலீசார் அணிந்திருந்த ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கண்ணாடிகளே. பார்வைக்கு வித்தியாசமாக தோன்றிய இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளை கண்ட பலரும், அவற்றை metas ray bans என்று கருதினர்.

ஆனால் அந்த கண்ணாடிகள் மெட்டா ரே பான் கண்ணாடிகள் இல்லை. டில்லி போலீசார், தங்களுக்காகவே இந்தியாவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்மார்ட் கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தக் கண்ணாடிகள் Ajnalens என்ற மும்பை நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் சிறப்பம்சங்கள் முக்கியமானவை. இந்த கண்ணாடிகள் ஒருவரது முக அடையாளத்தை வைத்து, அவர் யார் என்று கண்டறியும் திறன் கொண்டவை.அந்த கண்ணாடி அணிந்திருக்கும் ஒரு அதிகாரி உங்களைப் பார்க்கிறார். பார்த்த வினாடியிலேயே, உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து விடுகிறது. சில மில்லி விநாடிகளில், அதன் நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள 65,000 பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கிறது. நினைவகத்தில் ஏற்கனவே பதியப்பட்ட குற்றவாளிகள், தேடப்படும் நபர்களின் படத்துடன் ஒப்பிட்டு, அந்த நபராக நீங்கள் இருந்தால், அதிகாரியை எச்சரித்து விடும்.

அப்படித்தான், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகள், போராட்ட கும்பலில் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். பொது இடங்கள் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் மக்களின் முகங்களை ஸ்கேன் செய்து, போலீசாரின் குற்றப் பதிவேட்டுத் தரவுகளுடன் உடனடியாக ஒப்பிட இந்த கண்ணாடிகள் பேருதவியாக இருக்கின்றன. இந்த கண்ணாடிகளுக்கு இண்டர்நெட் தேவையில்லை. குருகிராமில் உள்ள ஒரு AI ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜார்விஸ் (Jarvis) என்ற மென்பொருள் கண்காணிப்பில் இந்த கண்ணாடி இயங்குகிறது. டில்லியில் பொது இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களுடன் இணைக்கப்பட்ட இந்த மென்பொருள், முகங்கள், வாகனங்கள், கூட்டங்களை ஸ்கேன் செய்யும் வகையில் கண்ணாடியில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஜார்விஸ் (Jarvis) என்ற மென்பொருள், ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் போலீசாருடன் இணைந்து குற்றப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கவும், காணாமல் போனவர்களைத் தேட உதவவும் உருவாக்கப்பட்டது. தற்போது டில்லி போலீசார் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கான முக்கிய கருவியாக இந்த கண்ணாடி, அதன் மென்பொருளை பயன்படுத்தி வருகின்றனர்.