×

இனி ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது....தமிழ்நாட்டிற்கு வரும் 'ட்ரோன் போலீஸ்' - முதல்வர் விஜய்..!!

 

பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், சிங்கப்பெண் சிறப்புப் படை திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்த படைக்காக அறிமுகம் செய்யப்பட்ட வாகனத்தை முதல்வர் இயக்கினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். காவல் துறையினர் நடத்திய இசை நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் நடித்த திரைப்பட பாடல்கள் இசைக்கப்பட்டன. அவற்றையும் முதலமைச்சர் புன்னகையுடன் கேட்டு ரசித்தார்.

முன்னதாக, விழாவில் முதல்வர் விஜய் பேசுகையில், "பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து கேட்கும்போது மனம் பதறுகிறது. கண்கள் கலங்குகின்றன. பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நடந்தால் எப்படி வேதனையாக இருக்குமோ, அதே உணர்வோடுதான் நான் இதை பார்க்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை சமூக வலைதளத் பதிவுகளாக மட்டும் பார்க்காமல், அதன் உண்மை நிலையை புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் ஏன் நடைபெறுகின்றன என்பதை ஆய்வு செய்து பார்த்தபோது, அவை அனைத்தும் போதைப்பொருள் நடமாட்டத்துடன் தொடர்புப்பட்டிருப்பதை காண முடிகிறது. எனவே, போதைப்பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.

போதைப்பொருள்கள் பிரச்சனை சமீபத்தில் உருவானது அல்ல; பல ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்சனைதான். பல ஆண்டுகளாக இதை கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் அதன் வேர் ஆழமாக பரவியுள்ளது. அதை யார் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது மக்களுக்கே நன்றாகத் தெரியும். தற்போது அதைப் பற்றி பேசுவதில் பயனில்லை.

போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இவை புதிய பிரச்சனைகள் அல்ல. பிரச்சனை ஏன் ஏற்பட்டது என்பதைவிட, அதை எவ்வாறு சரி செய்வது என்பதில்தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

 

பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது வெறும் சட்டம் - ஒழுங்கு சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது சமூக ஒழுங்கு மற்றும் தனிமனித ஒழுக்கத்துடனும் தொடர்புடையது. ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட்டால் பல பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும்.

பள்ளி, கல்லூரி, பணியிடம், பயண நேரம் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கையின் அனைத்து சூழல்களிலும் பெண்கள் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதல் இலக்கு.

பெண்களுக்கு தொந்தரவு கொடுத்து தப்பித்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை. பெண்களின் பாதுகாப்பை பாதிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் இழைப்பவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் விரைவாக தாக்கல் செய்யப்பட்டு, சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும்.

அதே நேரம், விரைவான நடவடிக்கைகளில் எந்த நிரபராதியும் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் காவல்துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும். சிங்கப்பெண் சிறப்புப் படை திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.354 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக இந்தப் படைக்காக மட்டும் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் நவீன வசதிகள் கொண்ட வாகனங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் காவல் நடவடிக்கைகளில் இந்தப் படை முக்கிய பங்கு வகிக்கும். இதனால் அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் வழக்கு விசாரணை மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

பெண்களை பின்தொடர்தல், பாலியல் தொல்லை, தொடர்ந்து குறிவைத்து தொந்தரவு செய்தல், பெண்களை கடத்தும் முயற்சி, பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வது, பேருந்துகளில் பெண்களுக்கு தொந்தரவு அளித்தல் மற்றும் கூட்ட நெரிசல்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் இந்தப் படை முக்கிய பங்கு வகிக்கும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்தியாவிலேயே முதன்முறையாக ட்ரோன் மூலம் ரோந்து கண்காணிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பெண்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அரசு நன்கு புரிந்துகொண்டுள்ளது. அவற்றை படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும்தான் அரசின் மிக உயர்ந்த முன்னுரிமை.

ஒரு அரசின் நோக்கமும் இலக்கும் நேர்மையானதாக இருந்தால், அதன் திட்டங்களும் முயற்சிகளும் சரியான பாதையில் செல்லும். அப்படிப்பட்ட அரசுதான் தற்போதைய அரசு.

ஒரு அரசின் உண்மையான வெற்றி என்பது உள்கட்டமைப்பு வளர்ச்சி அல்லது பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல; அந்த மாநிலத்தின் பெண்களும் குழந்தைகளும் மரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்கிறார்களா என்பதில்தான் உள்ளது. அதில் அரசு முழு கவனம் செலுத்தும்" என்று கூறி தன் உரையை முடித்தால் முதல்வர் விஜய்.

இதையடுத்து விழாவில் பேசிய தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், "தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவது தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய இலக்காகும்.
பெண்கள் எங்குச் சென்றாலும் பயத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய சூழல் நிலவுவதோ அல்லது காவல்துறை மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணமோ உண்மையான பாதுகாப்பான சமூகத்தின் அடையாளம் அல்ல. பெண்களின் பாதுகாப்பை சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையே பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும்.

சிங்கப்பெண் என்ற கருத்து பெண்களின் பாதுகாப்பை கடந்த ஒன்று. பெண்களைப் பற்றிய சமூகத்தின் பார்வையிலும் மனநிலையிலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதே அதன் நோக்கம். பெண்களின் கண்ணியமும் சுதந்திரமும் அவர்களின் அடிப்படை உரிமைகள் என்பதை காவல்துறை முழுமையாக உணர்ந்துள்ளது. அதனை பாதுகாக்க காவல் துறை தொடர்ந்து சிறந்த பங்களிப்பை வழங்கும்" என்று தெரிவித்தார்.