×

வீட்டுக்கு போக முடியாது.. போன் பேச முடியாது! - அல்வா விழாவுக்குப் பின் பட்ஜெட் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?

 

2026-27ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளன. இந்த சூழலில், பாரம்பரிய அல்வா கிண்டும் விழா டில்லியில் உள்ள நிதி அமைச்சகத்தில் (ஜன.27) நடைபெற்றது.

இந்நிகழ்வில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ள மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அல்வா விழா என்பது இனிப்புகளை வினியோகிப்பது என்பது மட்டும் கிடையாது. பட்ஜெட் செயல்முறை தொடர்பான அனைத்து அம்சங்களும் மிக ரகசியமாக வைக்கப்படும் என்பதன் தொடக்கம் ஆகும். இந்த அல்வா விழாவுக்கு பின்னர், அனைத்து அதிகாரிகளும் பட்ஜெட் ஆவணங்களை தயாரிப்பதில் மும்முரமாக இறங்கி விடுவர்.

இதில் நேரடியாக ஈடுபட்டு உள்ள அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இருக்காது.அவர்கள் அனைவரும் தங்களின் வீட்டுக்கு போகமுடியாது. வெளியில் உள்ள யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியாது. வரி மாற்றங்கள், செலவின விவரங்கள், முக்கிய புள்ளி விவரங்கள் என எந்தவித தகவல்களும் கசிந்துவிடாமல் இருக்கவே இத்தகைய முன் தயாரிப்புகள் பின்பற்றப்படுகின்றன.

பொதுவாக, பாரம்பரியப்படி, எந்த ஒரு நிகழ்வும் இனிப்புடன் தொடங்குவது மகிழ்ச்சியான மற்றும் மங்கலகரமானது ஆகும். அல்வா விழாவும் அதன் ஒரு பகுதியே. நிர்வாக ரீதியாக கணித்தால், பட்ஜெட் குறித்த அனைத்தும் முடிந்து, அந்த ஆவணம் இறுதி செய்யப்பட்டு உள்ளது என்பதே இதன் பொருள்.