குறை சொல்ல முடியல.. அதான் அடிமைனு சொல்றாரு!" - முதல்வர் ஸ்டாலினை சீண்டும் இபிஎஸ்..!!
சென்னை ஆர்.கே.நகர் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் நேற்று பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதி. மெட்ரோ ரயில், கலை அறிவியல் கல்லுாரி என, இத்தொகுதிக்கு பல திட்டங்களை தந்தார்.
மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு, அனைத்து நன்மைகளும் கிடைக்கும். தி.மு.க.,வில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என, ஒரே குடும்பத்தில் இருப்போர் மட்டுமே கட்சியிலும், அதிகாரத்திலும் இருக்க முடியும்.
அ.தி.மு.க., மக்களுக்காக பாடுபடும் கூட்டணி; தி.மு.க., கூட்டணி வெற்றுக் கூட்டணி. உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதே ஸ்டாலினின் எண்ணம். அதை, தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜெயலலிதா மறைந்த பின், அ.தி.மு.க., உடைந்து விடும், முடங்கி விடும் என நினைத்தனர். வழக்கு போட்டு முடக்க, 'பி' டீமை உருவாக்கி முயற்சி செய்தனர்.
ஆனால், மக்கள் துணையோடு, தொண்டர்கள் துணையோடு, எதிர்ப்புகளை எல்லாம் துாள் துாளாக உடைத்து, அ.தி.மு.க., வலிமையுள்ள இயக்கம் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறோம். தமிழகத்தை 31 ஆண்டுகள் ஆண்ட கட்சி அ.தி.மு.க., இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற உயர்ந்த இலக்கை தமிழகம் எட்டிப்பிடித்தது அ.தி.மு.க., ஆட்சியில் தான்.
நாங்கள் கூட்டணி அமைக்கும்போதே, தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிக்கு, அ.தி.மு.க., தான் தலைமை என தெளிவுபடுத்தி விட்டோம்; தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என, அமித் ஷா சொல்லி விட்டார்.
அ.தி.மு.க., மீது எந்த குறையும் சொல்ல முடியாததால், 'பா.ஜ.,வின் அடிமை பழனிசாமி டில்லி போகிறார்' என, ஸ்டாலின் புலம்புகிறார். நான் டில்லி சென்றால், ஸ்டாலினுக்கு அதிர்கிறது. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால், என்ன பேசுறோம் எனத் தெரியாமல், தி.மு.க.,வினர் பேசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.