×

"நான் கருணாநிதியின் பேரன்; எதற்கும் பயப்பட மாட்டேன்!" - விடுதலையான பின் உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு!

 

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தஞ்சை போலீசரால் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்டு, சாலை மார்க்கமாக தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு நேற்றிரவு சுமார் 7 மணியளவில் உதயநிதி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்ட அவர், சென்னை திரும்ப திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,, "திமுக ஆட்சியின்போது மேட்டூர் அணையில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் தற்போது வரை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடகா அரசிடம் காவிரி நீரை கேட்டுப் பெறும் தைரியம் தவெக அரசுக்கு இல்லை.

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் நான் பேசாத ஒரு விஷயத்தை எடிட் செய்து சில விஷயங்களை அதில் சேர்த்துள்ளனர். நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு ஆதரவாக பேசினேன்.தவறான எண்ணத்தில் யாரையும் புண்படுத்தும் விதத்தில் தாழ்த்தி பேச வேண்டும், குறிப்பிட்ட பெண்களை தாழ்த்தி பேச வேண்டும் என்ற எனக்கு எண்ணம் இல்லை. என்னுடைய பெற்றோர், என்னுடைய குடும்பம் என்னை அப்படி வளர்க்கவில்லை. எனக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். அவருடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பெண் குழந்தை இருக்கிறார். தங்கை இருக்கிறார். எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் எனது தாய், தந்தையாக பார்த்து பேசிக் கொண்டிருக்கிறேன்.

இன்று சட்டமன்றம் கூடுகிறது. அங்கு மேகதாது அணை விவகாரம் குறித்து பேசுவார்கள் என தெரிந்துக் கொண்டு நான் பேசாத விஷயத்தை பேசிவிட்டேன் என தேசிய ஊடகங்கள் வரை பேசவைத்து பெரிய விஷயம் ஆக்கியுள்ளனர்," என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

மேலும், "காவல்துறையினர் வந்து என்னை கைது செய்தனர். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். நான் கருணாநிதி பேரன் யாருக்கும் பயப்படமாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் நீதிமன்றத்தில் சென்று விசாரணைக்காக அழைத்து செல்கிறோம் என கூறியுள்ளனர்.

ஒரு தேசவிரோதியை கூட்டி செல்வது போல சென்னையில் இருந்து என்னை அழைத்து வந்தனர். தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை என்ற பெயரில் பல கேள்விகளைக் கேட்டுவிட்டு என்னை அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்.

பொய் வழக்கு போட்டு என்னை அச்சுறுத்தலாம் என நினைத்தார்கள். என்னுடைய கைதை கண்டித்து திமுக தொண்டர்கள், உடன்பிறப்புகள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கும் பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

நான் பேசியதை முழுதாக கேட்காமல், ஆராயாமல் தவறாக பேசிவிட்டேன் என சில தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அது எனக்கு வருத்தமாக உள்ளது. நான் தவறாக பேசவில்லை; விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக இந்த தரம்கெட்ட அரசு என்னை கைது செய்துள்ளது. நான் மீண்டும் சொல்கிறேன். இந்த கைதுக்கு நான் கூச்சப்படமாட்டேன். நான் மீண்டும் 100 முறை பேசுவேன். இரட்டை அர்த்தத்தில் பேசி உள்ளேன் என்று கூறுகிறார்கள். நான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை. ஒரே அர்த்தத்தில் தான் பேசினேன்.

இந்த முதல்வருக்கு தமிழ்நாடு வரலாறு, திமுக வரலாறு தெரியவில்லை. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.மக்கள் நிச்சயம் பதில் தருவார்கள். நாங்கள் நாளை சட்டமன்றம் செல்கிறோம். எங்கள் தலைவர் எங்களுக்கு உரிய அறிவுரையை கூறுவார்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.