மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல் கணவர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
ஐதராபாத்தில் மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல் சாப்ட்வேர் பொறியாளர் கணவர் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகரை சேர்ந்த ஸ்ரீனிவாச ராவுக்கு ஜோதி என்பவருடன் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ஸ்ரீனிவாசராவ் ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து நல்லகண்ட்லாவில் உள்ள ராங்கி கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்ரீனிவாச ராவ் மீதுள்ள சொத்துக்களை மனைவி ஜோதி தனது பெயரில் எழுதி வைக்கும்படி கூறி அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், இரு குடும்பங்களின் பெரியவர்களும் வந்து இருவரையும் சமாதானப்படுத்த முயன்று பஞ்சாயத்து செய்து வைத்தும் அதனை இருவரும் ஏற்கவில்லை. இரண்டு பிள்ளைகள் இருந்தபோதிலும், சொத்துக்காக தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்தன. இந்தநிலையில் தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து ஸ்ரீனிவாச ராவ் தற்கொலை செய்து கொண்டார். இதில் ஸ்ரீனிவாச ராவ் பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சூழலில், ஸ்ரீனிவாச ராவின் தாயார் கமலம்மா, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தனது மகன் சீனிவாச ராவின் தற்கொலைக்கு மருமகள் ஜோதி தான் காரணம் என்று சந்தாநகர் போலீசில் புகார் அளித்தார். ஸ்ரீனிவாச ராவின் சொத்துக்களை எழுதி வைப்பதில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததே தற்கொலைக்கு காரணம் என்றும் மன அழுத்தத்தில் இருந்த ஸ்ரீனிவாச ராவ், தனது மனைவியின் துன்புறுத்தலைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். சந்தாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீனிவாச ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுபுறம் ஸ்ரீனிவாச ராவ் தற்கொலைக்கு அவரது மனைவி ஜோதியின் பங்கு குறித்து சந்தாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.