×

காதல் திருமண செய்த பெண்ணை மொட்டை அடித்து துன்புறுத்தி கணவர் இறந்தாக சடங்கு

 

கிருஷ்ணகிரி அருகே காதலனுடன் சென்றதால் ஆத்திரத்தில் பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக இளம்பெண் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் தேஜஸ்ரீ (19). இவர் தன் காதலன் தீபக் (21)  மற்றும் உறவினர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், “நான் எங்கள் பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காதலித்தேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் காதலுக்கு என் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியேறி தீபக் குடும்பத்துடன் வசித்தேன். எனக்கு திருமண வயது வராதால், காதலன் தீபக் அவரது மாமா வீடு உள்ள ஓசூர் அலசநத்தத்தில் வசித்து வந்தார். தீபக் வீட்டில் இருந்த என்னை, என் பெற்றோர் கடத்தி சென்று, காமன்தொட்டி அடுத்த கோபச்சந்தரம் ஆற்றில் எனக்கு மொட்டை அடித்து கணவன் இறந்தால் என்ன சடங்கு செய்வார்களோ அவற்றை செய்தனர். கருச்சிதைவு மாத்திரை கொடுத்தனர். என்னை அடித்து துன்புறுத்தினார்கள். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் தீபக் வீட்டுக்கு பாதுகாப்புக்காக சென்று விட்டேன்.

இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் அளித்த புகாரின்பேரில், என் பெற்றோர் உள்பட 4 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. நான் தற்போது காதலன் தீபக் வீட்டில் பாதுகாப்பாக உள்ளேன். என்னை தீபக் கடத்தியதாக என் பெற்றோர் மீண்டும் புகார் கொடுத்து எங்களை பிரிக்க நினைக்கின்றனர். இது குறித்து விசாரித்து என் பெற்றோர்கள் என்னை மிரட்டுகின்றனர். அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.