மனைவியை நண்பர்கள் உதவியுடன் கடத்திய கணவன்! பெரம்பலூரில் பரபரப்பு
பெரம்பலூரில் கணவனால் காரில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு வந்த போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் பெருமாள்- செல்வராணி. கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவன் பெருமாளிடமிருந்து பிரிந்து வந்த செல்வராணி தனது மகள் கீர்த்தனாவுடன் விசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிற்பட்ட வகுப்பை (BC) சேர்ந்த கீர்த்தனா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வயலப்பாடி கீரணூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தவரான (SC) மகேஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதையறிந்த பெருமாள் காதல் தம்பதியருக்கு அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்துவந்ததாக கூறப்படுகிறது. இனால் மகேஷ்குமார் கீர்த்தனாவுடன் கோவைக்கு சென்று சமையல் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.மகேஷ் தம்பதியினர் அவ்வப்போது பெரம்பலூர் வந்து ஓரிருநாள் அந்த வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் மகேஷ்- கீர்த்தனா தம்பதியினர் சட்டமன்ற தேர்தலில் ஓட்டளிப்பதற்காக கடந்த வாரம் பெரம்பலூர் வந்து கோல்டன் கிட்டியிலுள்ள வீட்டில் தங்கியுள்ளனர். இவர்களுடன் தீர்த்தனாவின் தாய் செல்வராணியும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கீர்த்தனா தம்பதியினர் உடல்நிலை பாதிக்கப்பட்ட தங்களது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியே இருந்த செல்வராணியை நேற்று இரவு அவரது கணவர் பெருமாள் தனது நண்பருடன் வந்து காரில் கடத்தி சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கீர்த்தனாவுக்கு, தனது தாய் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் கடத்தி சென்றது தனது தந்தை தான் என்பதை அங்குள்ள CCTV கேமிரா பதிவின் மூலம் அறிந்த அவர், தனது தந்தையால் தனது தாயின் உயிருக்கு ஆபத்துள்ளதால் அந்த கண்காணிப்பு கேமரா பதிவுடன் தனது தாயை மீட்டு தருமாறும் கண்ணீருடன் பேசிய ஆடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த தகவல் வைரலாகி வந்த நிலையில். கீர்த்தனாவிடம் புகார் மனுவை பெற்ற போலீஸார் செல்வராணியின் கணவன் பெருமாளின் செல்போன் சிக்னலை ஆதாரமாக வைத்து செல்வராணியை தேடி வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி அருகேயுள்ள திண்ணனூர் கிராமத்தில் உள்ளது உறவினர் ஒருவர் வீட்டில் இருந்து செல்வராணியை மீட்டு வந்துள்ளனர். கடத்தி சென்றவர்கள் போலீஸார் தங்களை தேடுவதையறிந்து செல்வராணியை உறவினர் வீட்டில் விட்டு விட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வராணியிடம் விசாரணை மேற்கொண்ட பெரம்பலூர் போலீஸார் அவர் கொடுத்த தகவலின் பேரில் கடத்தலில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் மனைவியை அவரது கணவனே நண்பர்களுள் உதவியுடன் காரில் கடத்தியுள்ள சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.