ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடித் தீர்ப்பு!
அரசு மருத்துவர்களாக பணிபுரிந்து 2009-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தை குறைத்து கடந்தாண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக மருத்துவர்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த அரசாணையை மதுரை அமர்வு தனி நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து அந்த உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு, "அரசு மருத்துவர்கள் பணியின் போது கடமையைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளனர். நிர்வாக அதிகாரிகள் ஓய்வூதியத்தை குறைக்க முடியாது. ஓய்வூதியதாரர்களின் அவல நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மருத்துவர்கள் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு ஆற்றிய சேவைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அரசின் நிதிச் சுமைகளைக் காரணம் காட்டி, அவை புறக்கணிக்கப் படக்கூடாது. மேலும் அவர்களின் குடும்பங்களை கைவிடக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை மறுப்பது அல்லது பறிப்பது என்பது சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட நடைமுறை அடிப்படையில் தான் மேற்கொள்ள வேண்டும்.
சட்டரீதியான மதிப்பற்ற ஒரு அரசாணையின் அடிப்படையில் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியை அரசாங்கத்தால் பறிக்க முடியாது.எனவே அரசு மருத்துவர்களின் ஓய்வூதியம் தொடர்பாக 2025 பிப்ரவரி 5-இல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
2009-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்களின் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை, கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி ரத்து செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த கூடுதல் ஓய்வூதியத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 300 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது எனக் கூறி, கடந்த திமுக ஆட்சியில், 2025 பிப்ரவரி 5 அன்று புதிய அரசாணை மூலம் ஓய்வூதிய உயர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
இந்த அரசாணையால் 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 850-க்கும் மேற்பட்ட மூத்த அரசு மருத்துவர்கள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் சுமார் 20,000 ரூபாய் வரை குறையும் சூழல் உருவானதால், இதற்கு எதிராக மருத்துவர்கள் சங்கங்கள் (DASE) மற்றும் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், மதுரை அமர்வு தனி நீதிபதி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.