“பெரியகுளம் வெங்கடாசலபதி கோயில் இடத்தை தர்கா ஆக்கிரமித்துள்ளது”- ஹெச்.ராஜா
பெரியகுளம் அருகே உள்ள மலைமேல் வெங்கடாசலபதி கோயில் இடத்தை தர்கா ஆக்கிரமித்துள்ளதால் முழுமையாக அளவீடு செய்ய வேண்டும் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது தாமரைக்குளம் கரடு என்ற மலைப் பகுதி. நத்தம் புறம்போக்கு பகுதியான இந்த மலையில், சுமார் நூற்றாண்டு பழமையான வெங்கடாசலபதி மலைக் கோயில் அமைந்துள்ளது. மேலும் இதற்கு சற்று தொலைவில் சஞ்சீவி மலை பாவா மகான் மாஹின் அபூபக்கர் சித்திக் ( ரலி ) தர்கா அமைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட மலைமேல் வெங்கடாசலபதி கோயில் கடந்த சில மாதங்களுக்கு முன் திருப்பணிகளுக்காக மூடப்பட்டது. இந்நிலையில் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோயிலை நேரில் சென்று பார்வையிட்டார் .
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா கூறுகையில், “மலைமேல் வெங்கடாசலபதி கோயில் நிர்வாகம் பொறுப்பில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் விரைவில் திறக்க வேண்டும். மேலும் கோயில் இடத்தை தர்காவும், அதனை ஒட்டிய தனியார் கல்லூரி நிர்வாகமும் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதியை முழுமையாக அளவீடு செய்து கோயில் இடத்தை மீட்க வேண்டும். தவறினால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடவேன்” என்றார்.