×

வீட்டுக்குக் குட்டி கிருஷ்ணரை வரவேற்பது எப்படி? கோகுலாஷ்டமி நாளில் தவறவிடக்கூடாத சிறப்பு வழிபாடுகள்!

 

கிருஷ்ணர் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தியாக சிலரும், கிருஷ்ணர் கோகுலத்திற்கு வந்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக சிலரும் கொண்டாடுவது வழக்கம். கிருஷ்ணர் அவதரித்த மதுரா நகரமே கிருஷ்ண ஜெயந்தி அன்று விழா கோலம் பூண்டிருக்கும்.

மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணர் அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். கிருஷ்ண ஜெயந்தி விழாவான ஜென்மாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி, அஷ்டமி ரோகிணி என பல பெயர்களில் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமர் மற்றும் கிருஷ்ண அவதாரங்கள் மட்டுமே மனித குலத்தில் அவதரித்து, தர்மத்தின் வழியில் வாழ்ந்து காட்டிய அவதாரங்களாகும். அதனாலேயே இந்த இரண்டு அவதார தினங்களும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களாக கொண்டாடப்படுகின்றன.

கிருஷ்ணர் அவதரித்தது ஆவணி மாதம், ரோகிணி நட்சத்திரம், தேய்பிறை அஷ்டமி திதியில் என புராணங்கள் சொல்கின்றன. அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலை நாட்டவே பகவான் கிருஷ்ணர், 5000 ஆண்டுகளுக்கு முன் அவதாரம் எடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த பண்டிகை ஆண்டுதோறும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். கிருஷ்ணர் அவதரித்தது இரவு நேரத்தில் என்பதால் மாலை நேரத்திலேயே கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகள் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

கிருஷ்ணர், மகிழ்ச்சி மற்றும் அன்பிற்குரிய கடவுளாக கருதப்படுகிறார். அதனால் இவரை வழிபட்டால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை மனதார வழிபட்டால் வெற்றி, அனைத்து விதமான நன்மைகள் ஆகியவற்றை நெறுவதுடன், இறுதியில் மோட்சத்தையும் அடைய முடியும் என்பது நம்பிக்கை. குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ணரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோகுலாஷ்டமி வழிபாட்டு முறைகள் :

 கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான பலகாரங்களை படைத்து வழிபட வேண்டும். வீடு முழுவதும் பாதம் போட்டு, கிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்தும் வழிபடலாம். கிருஷ்ணருக்கு மிகவும் விருப்பமான வெண்ணெய் படைத்து அன்றைய நாளில் வழிபடுவது சிறப்பு.