இலவச வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசு சொந்தமாக வீடு இல்லாமல் அரசின் புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி வாழ வேண்டும் என்பதற்காக இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் என்ற உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்யப்படுகிறது. இலவச மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு இல்லாமல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்ந்து வரும் ஏழை. எளிய குடும்பங்களுக்கு வீட்டு மனை வழங்கப்படுகிறது. மேலும், ஆக்கிரப்பு நிலத்திற்கு உண்டான பட்டாவையும் அரசே இலவசமாக வழங்கி வருகிறது.
இலவச வீட்டுமனை பட்டா பெறுவது எப்படி?
தமிழ்நாட்டில் நிலமற்ற ஏழை எளிய மக்கள் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ள அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா (Free House Site Patta) வழங்கப்படுகிறது. இதற்கான தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழுமையான விவரங்கள் இதோ:
- விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வேறு எங்கும் சொந்தமாக நிலமோ, வீடோ அல்லது காலி மனையோ இருக்கக்கூடாது.
- ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டும். சமீபத்தில் இந்த வரம்பு 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் எனில், அந்த இடத்தில் குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை வசித்ததற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை (Ration Card).
- வருமானச் சான்றிதழ் .
- சாதிச் சான்றிதழ்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- குறிப்பிட்ட இடத்தில் நீண்ட காலமாக வசிப்பதற்கான மின்சார பில், குடிநீர் வரி ரசீது அல்லது வாக்காளர் அடையாள அட்டை.
- நிலமற்றவர் என்பதற்கான சான்று.
விண்ணப்பிக்கும் முறை
இலவச வீட்டு மனை பட்டாவிற்கு நீங்கள் இரண்டு வழிகளில் விண்ணப்பிக்கலாம்:
1. ஆன்லைன் முறை - இசேவை மையம்
உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்திற்குச் சென்று, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து 'இலவச வீட்டு மனை பட்டா' கோரி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவுடன் உங்களுக்கு ஒரு விண்ணப்ப எண் (Application ID) வழங்கப்படும். இதை வைத்து ஆன்லைனில் உங்கள் மனுவின் நிலையை அறிந்துகொள்ளலாம்.
2. ஆப்லைன் முறை - நேரடியாக விண்ணப்பித்தல்
உங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் அல்லது வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளிக்கலாம். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும் இதற்கான மனுவை அளிக்கலாம்.
பட்டா வழங்குதல்
நீங்கள் விண்ணப்பித்த பிறகு, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். நீங்கள் நிலமற்றவர் என்பதும், அந்த நிலம் ஆட்சேபனையற்ற அரசு நிலம் என்பதும் உறுதியானால், மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்குப் பிறகு உங்களுக்குப் பட்டா வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பெறப்படும் பட்டா நிலத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, பொதுவாக 10 ஆண்டுகள் மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியாது.
யாருக்கெல்லாம் விண்ணப்பித்தாலும் பட்டா கிடைக்காது?
- சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நீர்நிலைகள், காடு நிலங்கள், ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான நிலங்கள், அனைத்து மத நிறுவனங்களின் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோவில் புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றுக்கு பட்டா வழக்கப்படாது.