தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் பெறுவது எப்படி?
தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்ற திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆகும்.இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் படி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது .அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள், டயலஸிஸ், புற்றுநோய் சிகிச்சை, மாரடைப்பு சிகிச்சை, கர்ப்பப்பை கட்டிகள் தொடர்பான சிகிச்சை, விபத்து எலும்பு முறிவு சிகிச்சை உட்பட பல சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை அவசியம்.
இத்திட்டத்திற்கான அடையாள அட்டை தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீடு திட்ட அலுவலகத்தில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இதனால் தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதனடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை வழங்கப்படுகிறது. இதுதவிர வட்டார அல்லது மாவட்ட சுகாதார அலுவலங்களை தொடர்பு கொண்டும் இந்த அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இந்த முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் ரேஷன் கார்டு நகல், ஏதேனும் ஒரு குடும்ப உறுப்பினரின் ஆதார் நகல் உள்ளிட்டவைகளை முகாமிற்கு கொண்டு வர வேண்டும்.
வருமான சான்றிதழ் முகாம் நடைபெறும் இடத்திலே வழங்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை இல்லாத தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.