தமிழ்நாடு அரசின் சோலார் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்கள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டங்களின் பயன்கள் தகுதியான பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைவதற்கான நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, தற்போது தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டமானது அறிவிக்கப்பட்டு அதன் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதுதவிர, பொதுமக்களுக்கு மேலும் பயனுள்ள வகையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், தமிழகத்தில் பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டமானதும் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வீட்டு மின் இணைப்புகளுக்கான சோலார் பயன்படுத்துதல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, இவ்விழிப்புணர்வு முகாமானது இன்றைய தினம் சிறப்பாக நடைபெறுகிறது.
இத்திட்டம் குறித்து, திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்தில் 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மின்நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் துண்டு பிரச்சாரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு வங்கிகள் மூலம் மின்நுகர்வோர்களுக்கு 1 கிலோ வாட் ரூ.30,000, 2 கிலோ வாட் - ரூ.60,000 மற்றும் 3 கிலோ வாட் மற்றும் அதற்மேல் ரூ.78,000 என்ற அடிப்படையில் கடனுதவிகளும் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. அவை நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படுகிறது.
மேலும், 1 கிலோ வாட் சூரிய தகடு, ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட்டுகள் வரை மின் உற்பத்தி செய்யும் நுகர்வோர் செய்யும் முதலீடு குறுகிய காலத்தில் திரும்ப பெறலாம். இத்திட்டத்தின் கீழ், மின் இணைப்புகள் வழங்குவதற்கு திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு 4,113 எண்ணம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, இதுநாள் வரை 1,200 மின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் திண்டுக்கல் பகுதியில் சிறப்பாக நடைபெற்று வரும் இம்முகாமினை போன்று தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவதற்கும் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் முகாமில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் திட்டப் பயன்கள் குறித்து எடுத்துரைத்துள்ளனர். புதிதாகவும் சோலார் இணைப்பினை பெறுவதற்கு பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் பயனாளிகள் pmsuryaghar.gov.in, www.solarrooftop.gov.in ஆகிய இணையதள முகவரியின் வாயிலாகவும் மற்றும் "PM-suryaghar" என்ற மொபைல் ஆப் வாயிலகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதில் விண்ணப்பிப்பதற்கு மின் கட்டண இரசீது மட்டும் இருந்தால் போதுமானதாகும். எனவே, பொதுமக்கள் இதனைக் கருத்தில்கொண்டு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்