☰
×

அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

 

தமிழக அரசின் புதிய அண்ணன் சீர் திட்டம் தொடர்பாக சமூக நல இயக்குனருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற சில தகுதிகள் உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும், யாரெல்லாம் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது என்பதையும் விளக்கியுள்ளது.

* திருமண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

* 2026ம் ஆண்டு அக்.10ம் தேதி முதல் 2027ம் ஆண்டு வரையிலான திருமணங்களுக்கு 2027ம் ஆண்டு ஜன.15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

* அரசு இ சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.inஇணையதளம் மூலம் விண்ணப்பிக்ககலாம்.

• திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.

* மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்று இருக்க வேண்டும்.

* திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களின் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.

* விண்ணப்பதாரர் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் சரி பார்க்கப்படும்.

* தகுதியுடைய விண்ணப்பதாரர் திருமண பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.

* விண்ணப்பத்தின் நிலை குறித்து குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

* திருமணம் நடைபெறும் 15 நாட்களுக்குள் திருமணத்தை தமிழகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

* தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும்.

* விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.

அண்ணன் சீர் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?

அண்ணன் சீர் திட்டத்திற்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள குடும்பங்கள், வருமான வரி செலுத்தும் குடும்பங்கள், தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது. அதே போல சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள குடும்பங்கள், 10 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது 25 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், வீட்டு உபயோகத்திற்கு ஆண்டுக்கு 3,600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர்த்து) அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் / ஓய்வூதியதாரர்கள், ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்கள் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. அதோடு, பிற துறைகள் / வாரியங்கள் மூலம் செயல்படுத்தப்படும் வேறு ஏதேனும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

மேலும், அண்ணா சீர் திட்டம் 5.10.2026 முதல் நடைபெறும் திருமணங்களுக்கு பொருந்தும் என்பதால், 5.10.2026 முதல் 15.01.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 15.01.2027 வரை விண்ணப்பிக்க சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெறாதவர்கள் விண்ணப்பிக்க முடியாது. திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்சம் சட்டபூர்வ வயதை நிறைவு செய்யாதவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பதாரர்கள் அரசு இ சேவை மையம் மூலமாகவோ அல்லது tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க திருமண சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு, குடும்ப அட்டை, முகவரி சான்று உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் உடனடியாகத் தெரிவிக்கப்படும். தவறாக நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், இணையதளத்திலேயே மேல்முறையீடு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் கள விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதியிருப்பின் பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுச் செயலாளர் ம. பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.