சொந்த தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி?
புதிய தொழில்களைத் தொடங்கி வெற்றிபெற விரும்பும் தகுதியான இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வங்கிகள் வாயிலாகக் கடனுதவி வழங்கப்படும். இதில், திட்ட மதிப்பீட்டில் (Project Cost) 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை தமிழக அரசு நேரடி மானியமாக வழங்குகிறது.
கூடுதல் சலுகைகளும் வட்டி மானியமும்:
குறிப்பாக, சமூகத்தில் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை பிரிவினரை ஊக்கப்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினருக்குப் (ST) பொது மானியத்துடன் கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமன்றி, வங்கிகள் வழங்கும் இந்த தொழில் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3 சதவீதம் வட்டியை அரசே ஏற்கும் வட்டி மானியமும் அளிக்கப்படும்.
யாருக்கெல்லாம் தகுதி உண்டு?
இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக (First-generation entrepreneur) இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகவும்; பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு: ஏற்கனவே மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. மேலும், நேரடி விவசாயம் சார்ந்த தொழில்களைத் தவிர்த்து, ஏனைய அனைத்து வகையான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு இக்கடனுதவி பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் அலுவலக முகவரி:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய முதல் தலைமுறை தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்த பின்னர், விண்ணப்பத்தின் அச்சு நகல் மற்றும் தேவையான அசல் கல்வி, இருப்பிட, சாதிச் சான்றிதழ்களின் நகல்களுடன், பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, சங்கம் ஹோட்டல் எதிரில், ராஜா காலனி பேருந்து நிறுத்தம், திருச்சிராப்பள்ளி - 620 001 என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி பயனடையலாம்.
இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற விரும்புவோர் 0431-2460823, 0431-2460331 அல்லது 8925534027 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.