"இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?" - ராகுல் காந்தி கண்டனம்..!!
"ஒன்றிய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?" என கவரப்பேட்டை ரயில் விபத்தை குறிப்பிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. மைசூரு- தர்பங்கா பாகமதி விரைவு ரயில் இரவு 8.30 மணியளவில் பொன்னேரியை கடந்து கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது மெயின் லைனில் செல்வதற்கு பதிலாக, லூப் லைனுக்குள் நுழைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் வேகமாக மோதியதால் ரயில் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. இந்த ரயில் விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டன. 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான ரயில்லில் இருந்து மீட்கப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 500 பேர் மாற்று சிறப்பு ரயில் மூலம் தர்பங்கா அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரயில் விபத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கவரப்பேட்டை ரயில் விபத்து குறுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஒடிஷா மாநிலம் பாலஷோரில் நடந்த ரயில் விபத்து போலவே கவரப்பேட்டையில் விபத்து நடந்துள்ளது. ஏராளமான ரயில் விபத்துகள் நடந்து பல உயிர்கள் பறிபோனபோதும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ஒன்றிய அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.