அதிமுக தொண்டர்களை விலைபேச முயற்சிப்பது எந்தவகையில் நியாயம்? "- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அம்பாசமுத்திரம் சட்டப் பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா, உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர், தங்களின் பதவியை ராஜினாமா செய்த கையோடு தவெகவிலும் இணைந்தனர். இந்த நிலையில், அண்மையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அதிமுகவின் 90 சதவீத நிர்வாகிகள் தவெக-வில் இணைவார்கள்" என கூறினார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சுக்கு அதிமுக-வினர் பலர் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் அதிமுக. இத்தகைய கட்சியின் 90 சதவீத தொண்டர்கள் தவெக-வில் இணைய உள்ளதாக, பல கட்சிகள் தாவி, இப்போது அமைச்சராகி உள்ள ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கேட்க நாதி இல்லை என்கிற மனநிலையில் அவர் இது போன்று தொடர்ந்து பேசி வருகிறார்.
உங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா? அல்லது உங்கள் தலைவர் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா?, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்படி பழனிசாமி வழி வந்த தொண்டர்களை கட்சியில் சேர கூவி கூவி அழைக்கிறீர்களே? விஜய்க்கு மக்களிடையே இருந்த செல்வாக்கு கேள்விக்குறி ஆகிவிட்டதா? அல்லது அதை நிலை நிறுத்த அதிமுக தொண்டர்களே வாருங்கள் என விலை பேசுகிறீர்களா?.
அதிமுக ஒரு சுயம்பு இயக்கம். அதிகாரம், பதவி, சுகம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது அல்ல, எம்ஜிஆர்-ஆல் உருவாக்கப்பட்டது . அதிமுக-வை குறைத்து மதிப்பிட்டவர்கள், அழிக்க நினைப்பவர்கள் எல்லாம் தோற்றுப் போயுள்ளனர். இது கடந்த கால வரலாறு. இப்போது புதிதாக அதிமுக-வை அழிக்க, அதிகார ஆசை காட்டி வருகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
அதிகார பலத்தை வைத்து முயற்சி செய்தாலும் தொண்டர்கள் உறுதியோடு தான் இருக்கிறார்கள். உங்களால் அதிமுக-வை அழிக்க முடியாது. யானை தன் தலையில் மண்ணை போட்டுக் கொண்டது போல, நீங்கள் உங்கள் அழிவிற்கு முயற்சிக்கிறீர்கள். ஆள் பிடிக்கும் வேலையில் தொடர்ந்து நீங்கள் ஈடுபட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்" என அந்த வீடியோவில் எச்சரித்துள்ளார்.
"விஜயின் செல்வாக்கு கேள்விக்குறியாகிவிட்டதா?
— PttvOnlinenews (@PttvNewsX) May 29, 2026
அதிமுக தொண்டர்களை விலைபேச முயற்சிப்பது எந்தவகையில் நியாயம்? "- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்#TVK | #CMVijay | #ADMK | #RBUdhayakumar | #EPS pic.twitter.com/6pE6Kf4qxL