ஒரே நாளில் அனைத்தும் நடந்தது எப்படி? - கரூர் கோவில் நில விவகாரத்தில் அரசுக்கு பா.ஜ.க. அடுக்கடுக்கான கேள்வி..?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,085 ஏக்கர் கோவில் நிலங்கள் விஷயத்தில், தவெக அரசு தனது அரசியல் லாபத்திற்காக செயல்படுகிறது. குறிப்பிட்ட நிலங்களில் வசிக்கும், 10,000 குடும்பங்களை வெளியேற்றுமாறு, பாஜ கூறவில்லை. எங்கள் கருத்தை அமைச்சர் நிர்மல்குமார் திரித்து கூறுவது கண்டனத்திற்குரியது.
அவசர கதியில் நடந்த இந்த செயல்கள் அனைத்தும், இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் தான் நடந்ததா? அரசியல் ஆதாயங்களுக்காக கோவில் நிலங்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்பதே, தமிழக பா.ஜ.,வின் நோக்கம். இனாம் சொத்துகளில், முறையான பட்டா பெற்றவை மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக, தவெக அரசு சொல்கிறது.அதை சரியென ஏற்று கொண்டாலும், இந்த சொத்துகளை, பத்திரப்பதிவுத் துறையும், இந்து அறநிலையத் துறையும், மாவட்ட நிர்வாகமும் தடை செய்து வைத்திருந்தது ஏன்?
இந்த காரணத்தை விளக்காமல், தவெக அரசு செயல்படும் விதம், வேறு ஏதோ அரசியல் நோக்கம் இருப்பதாக, மக்களுக்கு சந்தேகம் வலுக்கிறது.
மாவட்ட கலெக்டரின் பரிந்துரை, இணை ஆணையரின் குறிப்பு, ஆணையரின் இறுதி உத்தரவு, முதல்வரின் கரூர் பயணம், தவெக நிர்வாகி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பேச்சு என, அனைத்தும் ஒரே நாளில் நடந்தது எப்படி; ஏன் இந்த அவசரம்? இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.