×

இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி..! தக்காளி விலை கிடுகிடு உயர்வு..!

 

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்துதான் சென்னைக்கு அதிகளவில் தக்காளி வரத்து இருந்து வருகிறது. இந்த மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அறுவடையும் குறைந்துள்ளது. ஆகவே, சென்னைக்கு வரத்து குறைந்ததன் காரணமாக தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக ஜூன் மாதம் இறுதியில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 7 முதல் 15 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. சில்லறை விற்பனை கடைகளில் ரூபாய் 20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது ஓரளவு நல்ல விலைதான். ஆனால், இந்த மாதம் தொடக்கத்தில் கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 35 முதல் 50 ரூபாய் வரையும், சில்லறை விற்பனைக் கடைகளில் அறுபது ரூபாய்க்கும் விற்பனையானது. எனினும், அதன் பிறகு விலை சற்று குறைந்தது. ஜூலை 17ஆம் தேதி ஒரு கிலோ தக்காளி ரூபாய் 30 க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன் தினத்தில் இருந்து மீண்டும் சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கிலோவுக்கு 20 முதல் 25 வரை சென்னை கோயம்பேடு சந்தையிலேயே விற்பனை விலை அதிகரித்தது. சில்லறை கடைகளில் இதைவிட விற்பனை விலை அதிகமாகவே இருக்க வாய்ப்புகள் உள்ளன. தற்போது, சென்னையின் பல இடங்களில் சில்லறை விற்பனை கடைகளில் 60 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சமையலில் தக்காளி சேர்க்கவே இல்லத்தரசிகள் அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது. அரசு பண்னை பசுமைக் கடைகள் மூலம் தக்காளியை மானிய விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.