"ரயிலில் நடந்த கொடூரம்!" - புலம்பெயர் தொழிலாளி மீதான தாக்குதல்: மனிதநேயம் எங்கே போகிறது? மாரி செல்வராஜ் பதிவு..!
சென்னை மின்சார ரயிலில், போதையில் மிதந்த நான்கு சிறுவர்கள், வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கி, அந்த கொடூரத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "சென்னை மின்சார ரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான அருவருப்பான செயலும் தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது.
கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.