நடுரோட்டில் நடந்த பயங்கரம்! பெண் பைகரை மோதித் தள்ளி இழுத்துச் சென்ற கார்... பதற வைக்கும் கேமரா காட்சி!
ஹரியானா மாநிலம் குருக்ராமின் கோல்ஃப் கோர்ஸ் சாலையில், பெண் பைக் Biker ஒருவரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தின் போது அந்தப் பெண் கீழே தூக்கி வீசப்பட்ட நிலையில், அவருடைய இருசக்கர வாகனம் சாலையில் சில மீட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து காரை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ‘rebelwheels_sia_’ என்ற பக்கத்தை நடத்தி வரும் ‘சியா’ (Sia) என்ற இந்த பெண் பைக் சவாரியாளர், விபத்து தொடர்பாக தனக்கு நேர்ந்த துயரமான சம்பவத்தையும், அதற்கான விடியோ ஆதாரத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று சியா தனது ‘அப்ரில்லா ஆர்.எஸ் 457’ (Aprilia RS 457) ஸ்போர்ட்ஸ் பைக்கில் தனது நண்பர்கள் குழுவுடன் குருக்ராமின் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த சிலர் தங்களை தொடக்கம் முதலே பின்தொடர்ந்து வந்ததாக சியா குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தக் கார் சியாவின் பைக்கிற்கு மிக அருகில் ஆபத்தான முறையில் வந்துள்ளது. காரில் இருந்தவர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதை அடுத்து, பாதுகாப்பான இடைவெளியைப் பராமரிக்குமாறு சியா எச்சரித்துள்ளார். ஆனால், அந்த நபர்கள் பைக்கை நிறுத்துமாறு அவரிடம் கூறியுள்ளனர். மேலும், காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருந்ததாகத் தோன்றுவதாகவும் சியா குறிப்பிட்டுள்ளார்.
கார் தனது வாகனத்தை வழிமறிப்பதைத் தடுப்பதற்காக சியா தொடர்ந்து முன்னால் சென்றுள்ளார். அதேவேளையில், அவருக்குப் பின்னால் பைக்கில் வந்த அவரது நண்பரும் காரானது சியாவின் அருகே வரவிடாதவாறு பாதுகாப்பாகச் செல்ல முயற்சித்துள்ளார். இருப்பினும், அந்தக் கார் தொடர்ந்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்று, திடீரென சியாவின் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது பைக் மீது மோதியுள்ளது. இதில் சியா கீழே விழுந்த நிலையில், காரின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகத் தப்பிச் சென்றார்.
இந்த ஒட்டுமொத்த சம்பவமும் சியாவின் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஷன் கேமராவில் (Action Camera) பதிவாகியுள்ளது.
சாலையில் மற்றவர்களின் உயிரைப் பணயம் வைத்து விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் செல்லும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சியா குருக்ராம் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அந்த காரின் பதிவு எண் (Vehicle Registration Number) மற்றும் காரின் உரிமையாளர் (RC Owner) பெயர் தொடர்பான தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சியா பகிர்ந்த இந்த விடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. "
எனக்கு வேறு எதுவும் சொல்வதற்கில்லை, ஆனால் இன்று குருக்ராம் சாலைகளில் நான் பாதுகாப்பற்றதாக உணர்ந்தேன். இது போன்ற மனிதர்களுக்கு மற்றவர்கள் மீது மோதிவிட்டு தப்பி ஓடுவதற்கு எந்தப் பயமும் இல்லை" என்று அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.