காலையிலேயே கோர விபத்து : மதுரை அருகே ஆம்னி - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதல்; 5 பேர் உயிரிழப்பு..!
மதுரை கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில், இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) அதிகாலை சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி கே.எம்.ஆர் டிரான்ஸ் (KMR Tranz) எனும் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பைக் கடந்து எதிர் திசையில் வாகனங்கள் செல்லும் சாலையில் நுழைந்தது.
அப்போது, திருச்சிராப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது, தனியார் ஆம்னி பேருந்து வேகமாக மோதி, பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்ததாக நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த 41 பேர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் சிலர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால், அவர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.